OUR CLIENTS
மக்களாட்சிக்கு களங்கம் விளைவிக்கிறார் கிரண்பேடி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆவேசம்!
மக்களாட்சிக்கு களங்கம் விளைவிக்கிறார் கிரண்பேடி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆவேசம்! Posted on 26-Jan-2018 மக்களாட்சிக்கு களங்கம் விளைவிக்கிறார் கிரண்பேடி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆவேசம்!

புதுச்சேரி, ஜன.26-
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரத்தை கையில் எடுக்கிறார். இதன்மூலம் அவர், மக்களாட்சிக்கு களங்கம் விளைவிக்கிறார் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  செய்தியாளர்களிடம் கூறியதாவது: துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து விதிகளை மீறி ஆய்வில் பங்கேற்கிறார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், புதுச்சேரி மாநில பிரதிநிதித்துவ சட்டம், யூனியன் பிரதேசங்களுக்கான விதிகள் ஆகியவற்றை மீறி, அலுவலகங்களில் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதற்கு அவருக்கு அதிகாரமில்லை.

இதனை விரிவாக குறிப்பிட்டு, 9 முறை ஆளுநருக்கே கடிதங்கள் அனுப்பியுள்ளேன். ஆனால், விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்படுவதாக ஒரே வரியில் பதிலளித்து வருகிறார்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்குத்தான் முழு நிர்வாக அதிகாரம் உள்ளது. அமைச்சரவையின் ஆலோசனையை பின்பற்றியே துணை நிலை ஆளுநர் செயல்பட முடியும். இதுகுறித்து, குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சருக்கும் கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளேன்.

இந்தியாவில் உள்ள 25 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் தமிழகம், புதுச்சேரியைத் தவிர பிற மாநில ஆளுநர்கள் விதிமீறி செயல்படவில்லை. யூனியன் பிரதேசங்களில் டெல்லிக்கும், புதுச்சேரிக்கும் தான் சட்டப்பேரவை உள்ளது. சட்டப்பேரவை இல்லாத நிலையில் தான், குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் வரும். ஆனால், அவரது முகவரான துணைநிலை ஆளுநருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஆய்வு செய்வதாக, மக்களாட்சிக்கு களங்கம் விளைவித்து வருகிறார்.

ஆட்சியில் கருத்துவேறுபாடு, பிரச்சினை ஏற்பாட்டால், குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பலாம். ஆனால் ஜனநாயக விதிகளுக்கு எதிராக இவரது செயல்பாடுகள் உள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் இவ்வாறு செயல்படவில்லை. ஆளுநர் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இனியும் விதிமீறல் தொடருமானால், குடியரசுத் தலைவர், பிரதமரிடம் புகார் தெரிவித்து வலியுறுத்துவோம், பிற அரசியல் கட்சித் தலைவர்களிடமும் ஆளுநரின் விதிமீறல் குறித்து தெரிவிப்போம் என்று கூறினார். பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக பேசிய முதல்வர் நாராயணசாமி, “காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் 174 டாலராக இருந்த போது, பெட்ரோல் ரூ.65க்கு விற்றது. தற்போது, கச்சா எண்ணெய் பாதியாக குறைந்துள்ள போதும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. தென்மாநிலங்களில் புதுச்சேரியில் மட்டுமே வாட் வரி குறைக்கப்பட்டு குறைந்த விலையில் பெட்ரோல் விற்கப்படுகிறது’’ என்றும் தெரிவித்தார்.

பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, “புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக பேருந்துகளின் கட்டணம், அம்மாநிலங்களின் நிர்பந்தத்தின் காரணமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி நகரப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தாமல் பார்த்துக் கொள்வோம்’’ என்று தெரிவித்தார்.

Label