OUR CLIENTS
தமிழகத்தில் ஆளுங்கட்சியை மிரட்டுவதை பா.ஜ.க. நிறுத்த வேண்டும்! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்
தமிழகத்தில் ஆளுங்கட்சியை மிரட்டுவதை பா.ஜ.க. நிறுத்த வேண்டும்! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல் Posted on 20-Feb-2018 தமிழகத்தில் ஆளுங்கட்சியை மிரட்டுவதை பா.ஜ.க. நிறுத்த வேண்டும்!  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

மதுரை, பிப்.20-
தமிழக ஆளுங்கட்சியை மிரட்டுவதை பாரதிய ஜனதா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பராக கருதப்படும் நிரவ் மோடி, பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 400 கோடி சுருட்டியுள்ளார். இது தொடர்பாக 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் சி.பி.ஐ. அமைப்பிடம் புகார் செய்தோம். ஆனால் அது கிடப்பில் போடப்பட்டு விட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து சென்றிருந்த போது அந்த குழுவில் நிரவ் மோடி இடம் பெற்றிருந்தார். பஞ்சாப் நேசனல் வங்கியை பொறுத்தவரை உள் தணிக்கை, வெளி தணிக்கைகள் உண்டு. இது தவிர ரிசர்வ் வங்கியின் தணிக்கை குழுவும் ஆய்வு செய்யும்.  அப்படி இருக்கும் போது இத்தகைய இமாலய ஊழல் நடந்து இருக்கிறது. இதில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது புரியாத புதிராக உள்ளது. இது ஏழை, எளிய மக்களின் பணம்.

நிரவ் மோடி இப்போது வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். அவரது பாஸ்போர்ட்டை மத்திய அரசு முன்பே ஏன் முடக்கவில்லை? பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் தொடர்பாக நீதிபதி தலைமையில் முழு விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும்.  காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின்  தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு பாதகமாக அமைந்துள்ளது. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 14.75 டி.எம்.சி. தண்ணீர் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இது தஞ்சை, காவிரி டெல்டா பாசன விவசாயிகளை கடுமையாக பாதிக்கும்.

 உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்.  தமிழக அரசில் பா.ஜ.க.வின் தலையீடு அதிகம் உள்ளது. இதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் கருத்தே சிறந்த உதாரணம் ஆகும்.  தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத பா.ஜ.க., தமிழக அரசின் வளர்ச்சியில் எந்தவித கவனமும் செலுத்துவதில்லை. தமிழக ஆளுங்கட்சியை மிரட்டுவதை அவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழக மீனவர்கள் பிரச்சனை, நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு, தொல்லியியல் அகழாய்வு மற்றும் எரிவாயு உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசு, தமிழகத்துக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறேன்.  தமிழ கத்தில் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் யாரை பிரதிநிதியாக தேர்ந்து எடுப்பது? என்பது மக்களின் கையில் உள்ளது. மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என்ற கொள்கையில் முழு நம்பிக்கை உடையவர்கள் நாங்கள்.

புதுச்சேரியை பொ றுத்த வரை முதல்வர், கவர்னருக்கான அதி காரங்கள் தனித்தனியாக வரையறுக்கப்பட்டு உள்ளது. ஆனால் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்வருக்கு கூடுதல் அதிகாரம் உண்டு. கோப்புகளில் கையெழுத்திடும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளது.  தமிழகத்தில் கவர்னர் ஆய்வு நடத்துவது தேவையற்ற ஒன்று. ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் முதல்வராக இருந்திருந்தால் கவர்னர் இப்படி ஆய்வு செய்வாரா?.   இவ்வாறு அவர் கூறினார்.

Label