OUR CLIENTS
காவிரி தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை!
காவிரி தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை! Posted on 20-Feb-2018 காவிரி தீர்ப்பு குறித்து  சட்ட நிபுணர்களுடன்  முதல்வர் ஆலோசனை!

சென்னை, பிப்.20-
காவிரி நீர் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து சட்ட நிபுணர்களுடன் முதல்வர்  எடப்பாடி  கே பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.  காவிரிப் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக அனைத்துக் கட்சியினரின் கருத்துகளைக் கேட்டுப்பெறுவதற்காக பிப்ரவரி 22ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக, அரசு கூட்டி உள்ளது. 

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இந்த உத்தரவை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும்  உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்திற்கு ஏற்கனவே நடுவர் நீதிமன்றம் 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறி இருந்த நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் 14.75 டி.எம்.சி. குறைக்கப்பட்டு 177.25 டி.எம்.சி. தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசிப்பதற்காக நேற்று காலை 10.30 மணிக்கு முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தலைமை  செயலகத்துக்கு வந்தார்.  அவர் தனது அறையில் அதிகாரிகள் மற்றும் மூத்த வக்கீல்களை அழைத்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.  இதில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலாளர், காவிரி நீர் பங்கீட்டு கண்காணிப்பு அதிகாரிகள், மூத்த அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

தீர்ப்பில் உள்ள சாதக பாதகங்களை முதல்வருக்கு அதிகாரிகள் விளக்கமாக எடுத்துரைத்தனர்.  தமிழகத்துக்கு காவிரி தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு தேவையான அழுத்தம் கொடுப்பது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டுள்ளது.  இந்த பிரச்சனை குறித்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிப்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி விவாதித்தார்.  
இதுகுறித்து முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; காவேரிநடுவர் மன்றம் 5.2.2007 அன்று பிறப்பித்த தீர்ப்பினை எதிர்த்து, கர்நாடகா, கேரளாமற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தசிவில்வழக்குகள் மீது 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கியது.

தமிழ்நாட்டின் உரிமைகளையும், வேளாண் பெருமக்களின் நலன்களையும் கண்ணின் மணிபோல எப்போதும் காக்கும் மாண்புமிகு அம்மாவின் அரசு, இத்தீர்ப்பு வெளியானஅன்றைய தினமே (16.2.2018), அதனை முழுமையாக ஆராய்ந்து சாதகமான அம்சங்களை விரைந்து முன்னெடுத்துச் செல்லவும், நமக்குரிய காவேரி நதிநீரினை முழுமையாக பெறவும், சட்டவல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று, தேவையானதொடர் நடவடிக்கைகளை விரைவாகவும், உறுதியாகவும் எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்திருந்தார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து சட்ட ஆலோசகர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டுவருகிறது.    இப்பிரச்சனையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், காவேரி நதிநீரைக் கொண்டு விவசாயம் செய்துவரும் தமிழ்நாடு வேளாண் பெருங்குடி மக்களின் நலனை தொடர்ந்து பேணிக்காக்கவும், உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று பிறப்பித்துள்ள தீர்ப்பின்மீது எடுக்கப்படவேண்டிய மேல்நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கு ஏதுவாக 22.2.2018 அன்றுகாலை 10.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவதுதளத்தில்   முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. 
இக்கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து, அவர்களின் கருத்துக்களை பெற்று,  அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Label