OUR CLIENTS
அறிக்கையை செயல்படுத்தாமல் காற்றிலே பறக்கவிடும் மாவட்ட ஆட்சியர்கள்!
அறிக்கையை செயல்படுத்தாமல் காற்றிலே பறக்கவிடும் மாவட்ட ஆட்சியர்கள்! Posted on 20-Feb-2018 அறிக்கையை செயல்படுத்தாமல் காற்றிலே பறக்கவிடும் மாவட்ட ஆட்சியர்கள்!

வேலூர், பிப்.20-
பரிசு போட்டிகள் தடைச் சட்டம் 1955,  தமிழ்நாடு பரிசு திட்டங்கள் (தடை) சட்டம் 1979 ஆகிய சட்டங்களின்படி வணிக நிறுவனங்கள் பரிசு போட்டிகள் மற்றும் குலுக்கல் முறை பரிசுகள் நடத்தக்கூடாது. ஆனால்,  இப்போது பல வணிக  நிறுவனங்கள் தங்களின் சுய இலாபத்திற்காக  விலையை அதிகப்படுத்தியும், தரமற்ற மற்றும் பழைய இருப்பு பொருட்களை பரிசு போட்டிகளை அறிவித்து, அதன் மூலம் விற்பனை செய்து நுகர்வோர்கள் ஏமாற்றவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது.  

"ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு உதவாது என்பது போல்  இச்சட்டம் விதிகள் வெறும் ஏட்டோடு உள்ளது. மாவட்ட நிர்வாகமும் அறிக்கை வெளியிடுவது மட்டும் தங்களது தலையாய கடமையாக கொண்டுள்ளது." ஆனால் இதுபோன்று பரிசுதிட்டம் அறிவிக்கும் வணிக நிறுவனங்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்வது இல்லை என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். 

குறிப்பாக மொபைல் நிறுவனங்கள்தான் குலுக்கல் பரிசு, ஜோடி ஆபர் என்றெல்லாம் பரிசுகளை அறிவித்து தரமற்ற சைனா செட்டுகளை வாங்கி  டூப்ளிகேட் பொருட்களை விற்பனை செய்கின்றன.   இதுபோன்று பரிசு பொருட்கள் ஏதாவது கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு நுகர்வோர் தலையில் மொபைல் போன்கள், தரமில்லாத துணிகளை கட்டுவதில் வல்லவர்களாக உள்ளனர். இதை சமாளிக்கவே பரிசுகளை அளிப்பதாக அறிவிப்பு செய்கின்றனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தமிழகத்தில் பின்பற்றப்படாமல் காற்றிலே பறக்கவிட்டுள்ளது வேதனையளிக்கிறது.

தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் இலவசம் என்று அறிவிப்பு செய்கின்றனர் வணிகர்கள்.  குறிப்பாக தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்டுள்ள மொபைல் நிறுவனம் ஒன்று, பழையன கழிவோம், புதியன புகுவோம் என்ற தாரக மந்திரத்தை சொல்வதைப் போல சொல்லி பழச கொடுத்து புதுசுக்கு மாறுங்கள் என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்கின்றனர். ரூ.1 கோடி பரிசுகளை வெல்லுங்கள் என்று நுகர்வோரை சுண்டியிழுக்கின்றனர். ஸ்மார்ட் போன் வாங்குங்கள் ஜோடியாக மலேசியா செல்லுங்கள் என்று மெகா மோசடியாக ஒரு நிறுவனம் பொங்கள் சிறப்பாக அறிவிப்பு செய்தது. இதற்காக விளம்பரமும் தைரியமாக செய்கிறது. இதுபோன்று பரிசு திட்டங்கள் அறிவிப்பு செய்து பொருட்களை விற்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது அந்த நிறுவனம். ஆனால் பொதுமக்கள் பரிசு பொருட்களை குறித்து கேட்டால் கன்டிஷன் அப்ளை என்ற வார்த்தை காண்பித்து பொதுமக்களை ஏமாற்றுகின்றன. 1 மொபைல் வாங்கினால் 1 மொபைல் இலவசமாக வழங்குவதாக அறிவிப்பு செய்கின்றன. தரமற்ற மொபைலை இலவசமாக வழங்குவதால் இலவசமாக மொபைலை வாங்கி உயிரழப்பு, காது தொடர்பான பிரச்சனை போன்றவை நிகழ்கின்றன என்பது நிதர்சன உண்மை. ஆங்காங்கே மொபைல் வெடிப்பது போன்ற நிகழ்வுகள் அரங்கேறிவருகிறது. இதன் பின்புலம்  ஆராய்ந்தால்  இலவச மொபைல், பரிசு பொருட்கள் போன்ற உண்மைகள் வெளிவருகின்றன.

இந்த நிறுவனம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனது கிளைகளை நிறுவியதோடு சீனாவில் குவியல்களாக சாலையோரம் கிடக்கும் செல்போன் உதிரி பாகங்களை வாங்கி வந்து குறைந்த விலைக்கு செல்போன்களை தயாரித்து நுகர்வோர் தலையில் கட்டி கொள்ளை லாபம் பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பல வாடிக்கையாளர்கள் பகீர் புகார்களை கூற தொடங்கியுள்ளனர். இப்படித்தான் அண்டம் என்ற சொல்லை ஆங்கிலத்தில் கொண்ட மொபைல் போன் விற்பனை நிறுவனம் தமிழகம் முழுவதும் தனது கிளைகளை ஆரம்பித்தது. அந்த நிறுவனமானது உதிரி பாகங்களை திருடியதோடு தரமில்லாத செல்போன்களை விற்பனை செய்தது. இப்போது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. அதே பாணியில் இப்போது செல்போன் வாங்கினால் மெகா பரிசு திட்டங்களை அறிவித்துள்ளது ஒரு நிறுவனம். அந்த நிறுவனமானது செல்போனில் உள்ள உதிரி பாகங்களை உருவி எடுத்துக் கொண்டு சீன மொபைல் தயாரிப்புகளின் உதிரி பாகங்களை பொருத்தி தந்திரமாக  நுகர்வோர் தலையில் கட்டி விட்டு கொள்ளை லாபம் பார்த்து வருகிறது. ஊருக்கு 10க்கும் மேற்பட்ட கிளைகளை சர்வ சாதாரணமாக திறந்து வருகிறது. கூடவே மிளகாய் அரைக்க ஆரம்பித்து விட்டது ஒரு நிறுவனம். சில குறிப்பிட்ட மாடல் போன்களுக்கு தள்ளுபடியோடு கூடிய அன்பளிப்புகளும் தரப்படுகிறது. இதற்கு ஆசைப்பட்டு செல்லும் நுகர்வோர் செல்போன் வெடித்து சிதறி தங்களது பொன்னான அங்க அவயங்களை (காதுகள்) இழக்க நேரிடுகிறது. செல்போன் வெடித்து சிதறிய விபத்தில் பலர் இறந்துபோனதாக தகவல்களும் கூறப்படுகிறது. பரிசு வழங்க கூடாது, குலுக்கல் நடத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் கூட அதை கேட்டு நடக்காமல் இதுபோன்ற நிறுவனங்கள் பரிசு அறிவித்து நுகர்வோரை ஏமாற்றி வியாபாரத்தை பெருக்கி கொள்கின்றன. அதுமட்டுமின்றி தீபாவளி, பொங்கள்  பண்டிகைகளுக்கு ரூ-.1 கோடி பரிசு வெல்லுங்கள் என அறிவிப்பு செய்தது. எதன் அடிப்படையில் பரிசு வழங்கப்பட்டது, யார் யாருக்கு வழங்கப்பட்டது என எந்த தகவலையும் அந்நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கவில்லை. அதனால், கோபம் அடைந்த பொதுமக்கள் ஆங்காங்கே அந்த மொபைல் கடைகளில் சண்டையிடுவதும், அந்நிறுவன ஊழியர்கள் அவர்களை அவமானபடுத்துவதும் தொடர்கதையாக உள்ளது. இதற்கு முற்றுபுள்ளி வைப்பது யார் என்பது விளங்காத விடுகதையாக உள்ளது. 

அரசன் பெயரை கொண்டு இயங்கும் செல்போன் கடை வாலாஜாவில் திறப்பதாக கூறி பரிசுகள் தருவதாக கூறி நுகர்வோரை ஏமாற்றுகிறது. சத்யா நிறுவனம் ஒருபுறம் நுகர்வேரை ஏமாற்றுகிறது. டார்லிங் நிறுவனம் மெகா மோசடியில் ஈடுபடுகிறது. இலவசம் என்று அறிவித்து விட்டு பரிசுகளை தருவதும் இல்லை, இலவச பொருட்களை தருவதும் இல்லை. அப்படியே பரிசு பொருட்களை வழங்கினாலும் தனக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்து கண்துடைப்பு நாடகம் ஆடுகின்றனர். இதுபோன்று நுகர்வோருக்கு பட்டை  நாமம் போடுவதாக சமூக ஆர்வலர்கள் புகார்களை அடுக்கடுக்காக கூறுகின்றனர். இதோடு மட்டுமல்லாமல் செல்போன் வாங்க வேண்டும் என்றால் 0% டவுன் பேமென்ட், ரூ.1க்கு செல்போன், எளிய மாதத்தவணைகளில் செல்போன், செல்போன் வாங்கினால் ஹோம் தியேட்டர் இலவசம் இப்படி எதையாவது கூறி வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யும் தந்திரத்தை கையாள்கின்றனர். இதை அந்தந்த மாவட்ட நிர்வாகம் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு மட்டுமன்றி உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படும் நிறுவனங்கள் மீது ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கூடாது? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

மாதத்தவணைகளில் செல்போன் தருவதாகவும், 12 மாதங்கள், 24 மாதங்கள், 7 மாதங்கள் என பல வகையில் விளம்பரம் செய்கின்றனர். அத்துடன் ரூ.1க்கு முன் பணம் செலுத்தினால் போதும் என்பதுதான் உச்சகட்டமாக நுகர்வோரை ஏமாற்றுவதாகும். இப்படி விளம்பரங்களை பார்த்து ஏழை, எளியோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் செல்போன் கடைகளை நாடினால் அவர்களுக்கு கிடைப்பது என்னவோ ஏமாற்றம்தான். காரணம் செல்போன் கடைக்கு சென்றதும் அவர்கள் நுகர்வோரை பார்த்து கேட்கும் கேள்வி, நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள்? சொந்த வீடு இருக்கிறதா? செக் லீஃப் கொண்டு வந்துள்ளீர்களா? மின்கட்டணம் செலுத்திய ரசீது உள்ளதா? அ ரசு ஊழியர்கள் யாரேனும்  ஜாமின் போடுவார்களா? என்ற கேள்விகள்தான் முன் வைக்கப்படுகின்றன. இப்படி கேட்டதும் அந்த நுகர்வோர் அசிங்கப்பட்டு கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்று விடுகிறார். இப்படியெல்லாம் நுகர்வோர் அசிங்கப்படுத்தப்படுகிறார்கள். இதுதான் செல்போன் கடைகளில் நடைபெறும் கேவலமான விஷயங்களாகும்.  

சரி செல்போன்களை விற்பனை செய்யத்தான் இதுபோன்ற  நூதன மோசடிகளை செய்கின்றன என்றால் ஜவுளி   கடைக்காரர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் பங்குக்கு கவர்ச்சிகர விளம்பரங்கள், குலுக்கல் நடத்துவதாக அறிவிப்பது மற்றும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல்   துணி எடுத்தால் அன்பளிப்பு அளிப்பது போன்ற விளம்பரங்களும் செய்யப்படுகின்றன.  குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாவட்டம், வாலாஜா, ஆரணி பகுதியில் கேஆர்பி கமல் சிலக்ஸ், ஆற்காடு கனிஷ்க்  ஜவுளி கடை, தமிழ்நாடு ஜவுளி கடை என்று சொல்லிக் கொண்டே செல்லலாம். 

நுகர்வோரை ஏமாற்றி பிழைப்பு நடத்துவதை வாடிக்கையாக கொண்டு திரிகின்றனர் ஜவுளி கடைக்காரர்களும், செல்போன் கடைக்காரர்களும். இவர்களிடம் நுகர்வோர் எச்சரிக்கையாக  இருக்க வேண்டும். இல்லையெனில் சர்க்கஸில் நடப்பதை போன்று கரனம் தப்பினால் மரணம்தான் நிகழும். புழுவுக்கு ஆசைப்பட்டு தூண்டிலில் சிக்கி கொள்ளும் மீன் போலவோ, சத்தம் போட்டு பாம்புகளிடம் சிக்குண்டு மடியும் தவளைகள் போல இல்லாமல் விழிப்புணர்வுடன் இருக்க நுகர்வோர் பழகிக் கொள்ளவேண்டும். இலவசம், அன்பளிப்பு, பரிசுகள் போன்ற கவர்ச்சிகளுக்கு மயங்ககூடாது. பொருளின் தரத்தை ஆராய்ந்து  வாங்கி பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். நுகர்வோர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். விளம்பரங்களை நம்பி நமது உழைப்பை சுரண்ட துடிக்கும் இதுபோன்ற வியாபாரிகளிடம் இருந்து நிரந்தரமாக தங்களை விடுவித்து கொள்ள வேண்டும். பரிசு தடை சட்டம்,  மக்களுக்காக போடப்பட்ட சட்டம் அமல்படுத்தாமல் உள்ளது வெட்க கேடாக உள்ளது. அதை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு சிலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் என்னதான் நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பரிசு பொருட்கள், குலுக்கல் போன்ற செயல்களில் வணிக நிறுவனங்கள் ஈடுபடகூடாது என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டார். ஆனால் அதுபோன்று செயல்படும் வணிக நிறுவனங்கள் மீது ஏன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறது என்பதே புரியாத புதிராக உள்ளது. அறிக்கையை மட்டும் வெளியிடுவதே தலையாய கடமையாக கருதுகிறார்களா மாவட்ட ஆட்சியர்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. நடவடிக்கை எடுப்பது யார் என்பது புரியாத புதிரா உள்ளது. விடை கிடைக்குமா......!

Label