OUR CLIENTS
காவிரி வழக்கு விசாரணையில் தமிழக அரசு கோட்டை விட்டதா?
காவிரி வழக்கு விசாரணையில் தமிழக அரசு கோட்டை விட்டதா? Posted on 19-Feb-2018 காவிரி வழக்கு விசாரணையில்  தமிழக அரசு கோட்டை விட்டதா?

சென்னை, பிப்.19-
காவிரி வழக்கில் தமிழகம் கோட்டை விட்டது எப்படி என்பதை, தமிழக பொதுப்பணித் துறையினர் அம்பலப்படுத்தி வருகின்றனர்.
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா இடையே காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகள் உள்ளன. இப்பிரச்னையை கையாள, தமிழக அரசால் காவிரி தொழிற்நுட்ப பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.  உச்ச நீதிமன்றத்தில், பல மாநில நதிநீர் பிரச்னைகள் தொடர்பாக  தமிழகத்தின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு தேவையான தொழிற்நுட்ப உதவிகளை வழங்க வேண்டியது, காவிரி தொழிற்நுட்ப பிரிவின் முக்கிய பணி.

இப்பிரிவிற்கான அலுவலகம், சென்னை எழும்பூரில் இயங்கி வருகிறது. காவிரி தொழிற்நுட்ப பிரிவின் தலைவராக சுப்பிரமணியன், துணைத்தலைவராக ராம்குமார், உறுப்பினர் செயலராக சுந்தர்ராமன் உள்ளனர். இவர்களின் கீழ் பல அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.   சமீபத்தில்  உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தமிழகத்திற்கான காவிரிநீர் ஒதுக்கீடு 14.7 டி.எம்.சி., குறைக்கப்பட்டு உள்ளது. இதற்கு, காவிரி தொழிற்நுட்ப பிரிவினர்  இவ்வழக்கில்  அலட்சியமாக செயல்பட்டதே முக்கிய காரணம் என பொதுப்பணித் துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து, திருச்சி மண்டல நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காவிரி தொழிற்நுட்ப பிரிவு தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள், பல ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்று விட்டனர். அவர்களுக்கு, பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் இவர்கள், உச்ச நீதிமன்றம் சென்று வர  அரசு பல லட்சம் ரூபாய் செலவிடுகிறது. ஆனால் வழக்கில் தமிழகத்தின் நீதியை நிலைநாட்ட  இவர்கள் முழு முயற்சியுடன் பணியாற்றவில்லை.  காவிரி நீர் தொடர்பான வழக்கில், தொழிற்நுட்ப வல்லுனர்களை ஆஜர்படுத்துமாறு, 2017ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தின் சார்பில் தொழிற்நுட்ப வல்லுனர்கள் ஆஜராகினர்.   இவர்களிடம், காவிரியின் மேற்பரப்பு நீரோட்டம் மட்டுமின்றி  நிலத்தடி நீரோட்டம் உள்ளிட்டவை குறித்த கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அப்போது  காவிரியில்  நிலத்தடி நீரோட்டம்  20 டி.எம்.சி., என, தெரிவிக்கப்பட்டது.

இந்த நீரோட்டம் என்பது, ஜூன் முதல் ஜன., வரையிலான காவிரியின் மேற்பரப்பு நீரோட்டம் தான். இதை, தொழிற்நுட்ப வல்லுனர்கள் ஆணித் தரமாக தெரிவிக்கவில்லை. தற்போது, காவிரியின் நிலத்தடி நீரோட்டத்தை வைத்து, நீர் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு  பாசன பரப்பையும், பெங்களூரு நகரின் குடிநீர் தேவை யையும் அதிகரித்துகாட்டி, கூடுதல் நீரை பெற்று விட்டது. ஒரு நகரின் குடிநீர் தேவை, மக்கள் தொகை பெருக்கத்தால், ஆண்டுதோறும் அதிகரிப்பது வழக்கம். இதை, நீதிமன்றத்தில் தெளிவுப் படுத்தி இருக்க வேண்டும்.

கர்நாடகாவில் உள்ள பல அணைகள், 100டி.எம்.சி.,க்கு மேல் கொள்ளளவு உடையவை.  இந்த அணைகளில் உள்ள நீரை  குழாய்கள் அமைத்து, கர்நாடக அரசு  குடிநீருக்கு பயன் படுத்தி கொள்ள வேண்டும். தமிழகத்தின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையின் ஜீவாதாரம் காவிரி என்பதை, ஆணித்தரமாக தெரிவித்திருக்க வேண்டும். காவிரி வழக்கில்  தமிழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்  இப்பிரச்னை தொடர்பாக போதிய தொழிற்நுட்ப விபரங்கள் தெரியாதவர்கள். 

இவர்களுக்கு தகுந்த உதவிகளை காவிரி தொழிற்நுட்ப பிரிவினர் வழங்காததே, தமிழகத்திற்கு பின்னடைவு ஏற்பட முக்கிய காரணம் .எனவே, இதற்கு காரணமாக தொழிற்நுட்ப குழு அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். இதே நிலை தொடர்ந்தால், மற்ற மாநில நதிகள் பிரச்னையிலும்  தமிழகத் திற்கு பின்னடைவு ஏற்படும். பணியில் உள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, தொழிற்நுட்ப பிரிவில் இடம் பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Label