OUR CLIENTS
வேலூர் மாநகராட்சி முன்பு உள்ள பேருந்து நிழற்கூடை ஆக்கிரமிப்பு... பயணிகள் வெயிலில் காத்துகிடப்பது தொடர்கதையாகுது!
வேலூர் மாநகராட்சி முன்பு உள்ள பேருந்து நிழற்கூடை ஆக்கிரமிப்பு... பயணிகள் வெயிலில் காத்துகிடப்பது தொடர்கதையாகுது! Posted on 21-Feb-2018 வேலூர் மாநகராட்சி முன்பு உள்ள  பேருந்து நிழற்கூடை ஆக்கிரமிப்பு...  பயணிகள் வெயிலில் காத்துகிடப்பது தொடர்கதையாகுது!

வேலூர், பிப்.21-
வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் பேருந்து நிழற்கூடையை மறித்து வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் வெயிலில் காத்து கிடப்பது தொடர்கதையாகிறது.

வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் பேருந்து நிறுத்தம் அமைத்ததுடன் நிழற்கூடையை அமைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பேருந்து நிறுத்தத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருக்கும் வகையில் கார், வேன்கள் போன்ற வாகனங்களை நிழற்கூடையை மறித்து நிறுத்தி வைத்து விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் அந்த நிழற்கூடைக்குள் செல்ல முடியாமல் போகிறது. அதையும் மீறி பேருந்து நிழற்குடைக்குள் சென்றால் பேருந்தில் ஏற முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பலர் நிழற்கூடையை பயன்படுத்துவதே இல்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த இடத்தில் தேவையற்ற வாகனங்கள் இந்த நிழற்குடைக்கு அருகில் நிற்பதால் இதுபோன்ற நிலை நிலவுவதாக பொதுமக்கள் தரப்பில் பல்வேறு புகார்கள் கூறுகின்றனர். இந்தப்பக்கம் இளம்பெண்கள், பெண்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை நிலவுகிறது. வேலூர் தெற்கு போலீசார் இந்தபக்கம் ரோந்து பணியே மேற்கொள்வதில்லை. பேருந்து நிழற்கூடையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அல்லாடுகின்றனர். தற்போது வெயில் உச்சத்தை மெல்ல தொட்டுக் கொண்டு இருக்கும் வேளையில் கூட நிழற்கூடை பயணிகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை நிலவுவது வெட்கக்கேடானது, துரதிருஷ்டவசமானது ஆகும். 

இதனால் வெயிலையும் பொருட்படுத்தாமல் எவ்வளவு நேரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று வெயிலில் காத்துக் கிடந்து பேருந்து ஏறி சென்ற வண்ணமாக உள்ளனர். இப்படி இந்தப்பகுதியில் போக்குவரத்துக்கு பயன்படுத்த வேண்டிய நிழற்குடை பட்டப்பகலிலேயே பயன்படுத்தும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து பலதரப்பட்ட பொதுமக்கள் காவல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில், புகார்கள் மேல் அரசு அலுவலகங்கள், அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தால் நாடு நலம் பெறும். ஆனால் இதுபோன்று அலட்சியமாக நடந்து கொண்டால் பெண்களுக்கு இடையூறு ஏற்படுவதுதான் மிச்சம் என்ற நிலை தொடர்ந்து நிலவுகிறது. மது அருந்தவும், பீடி. சிகரெட் பிடிக்கவும், படுத்து உறங்கவும் இதுபோன்ற நிழற்கூடைகள் முறைகேடாக பயன்படுத்தப்படுகின்றன. அத்தோடு பொதுமக்கள் பேருந்து நிழற்கூடைக்குள் செல்ல முடியாத வண்ணம் ஆக்கிரமிப்பு செய்து வாகனங்களை குறுக்கே நிறுத்தி அராஜக போக்கில் நடந்து கொள்கின்றனர். இதை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி அலுத்துபோய் விட்டனர். 

மாநகராட்சி அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம் போன்ற அலுவலகங்கள் இயங்குவதால் பிற பகுதி மக்களும் அன்றாடம் வந்து செல்லும் இடமாக திகழ்கிறது. இந்நிலையில், மாநகராட்சி அலுவலர்கள் கூட இதுபோன்ற செயல்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பதில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. 

யாராக இருந்தாலும் நமக்கேன் வம்பு என்று ஒரு சிலர் செல்வதால் இவர்களது  கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காவல் துறை முழுமையாக வலம் வந்தால் போதும், வாகன தணிக்கையை கைவிட்டு இதுபோன்ற பொதுமக்கள் நலன் பயக்கும் பணிகளில் ஈடுபடலாம் என்பதே இந்தப்பகுதிவாழ் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். வேலூர் தெற்கு போலீசார் இதற்கு என்ன தீர்வு காண்கின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label