OUR CLIENTS
புதுச்சேரியில் அதிக வரிக்கு எதிர்ப்பு கடைகள், தியேட்டர்கள் மூடல் சாலைகள் வெறிச்சோடின!
புதுச்சேரியில் அதிக வரிக்கு எதிர்ப்பு கடைகள், தியேட்டர்கள் மூடல் சாலைகள் வெறிச்சோடின! Posted on 21-Feb-2018 புதுச்சேரியில் அதிக வரிக்கு எதிர்ப்பு கடைகள், தியேட்டர்கள் மூடல் சாலைகள் வெறிச்சோடின!

புதுச்சேரி, பிப்.21-
பல மடங்கு அதிகமாக வரி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் பெரும்பாலான கடைகள் நேற்று மூடப்பட்டிருந்தன. குபேர் அங்காடி, மீன் மார்க்கெட்டுகள் முழுமையாக இயங்கவில்லை. திரைக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. வர்த்தகம் நடக்காததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

புதுச்சேரியில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் வியாபாரிகளிடம் வணிக வளாக வரி, வணிக உரிமக் கட்டண வரி, தொழில் வரி என பல வகையான வரிகளையும் வசூலித்து வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த தனியாக வரி வசூலித்து வரும் நிலையில், மாநில அரசும் புதிதாக குப்பை வரியை விதித்துள்ளது.
மேலும் சொத்து வரி, தொழில் வரி, வணிக உரிமக் கட்டண வரியை பன்மடங்கு உயர்த்தியது. அத்துடன் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்குச் சொந்தமான கட்டிடங்களில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான வாடகையை 800 மடங்கு உயர்த்தியுள்ளன.

எனவே, ஒரே திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் வரி வசூலிக்கக்கூடாது என்பதால் புதிதாகக் கொண்டுவரப்பட்ட குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும் முதலான கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று அதிகாலை 1 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை 24 மணிநேர கதவடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பை தவிர்த்து பிற சங்க நிர்வாகிகளை கடந்த 16-ம் தேதி அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தின் முடிவில் உயர்த்தப்பட்ட வாடகை மற்றும் குப்பை வாருவதற்கான வரி மற்றும் இதர வரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது, உயர்த்தப்பட்ட புதிய வாடகை மற்றும் வரிகள் சம்பந்தமாக முதல்வர், எம்எல்ஏக்களுடன் கலந்து ஆலோசித்து ஒரு குழு அமைத்து அதன் அடிப்படையில் நிர்ணயிப்பது, கதவடைப்பு போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக்கொள்வது எனவும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஆனாலும் வணிகர் கூட்டமைப்பு நிர்வாகிகள், அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத் தவில்லை என்றால் திட்டமிட்டபடி கதவடைப்பு போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர். இப்போராட்டத்துக்கு பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிய லெனினிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், பகுஜன் சமாஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய குடியரசு கட்சி, இந்திய தேசிய இளைஞர் முன்னணி, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், மாணவர் கூட்டடைப்பு உள்ளிட்ட பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் திரையரங்க உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

அதனால் நேற்று புதுச்சேரியில் 90 சதவீதத்துக்கு மேலான கடைகள், வணிக நிறுவனங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. இதில் திரையரங்கு உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து காட்சிகளை ரத்து செய்திருந்தனர். கடையடைப்புப் போராட்டத்தில் நேரு வீதி, மிஷன் வீதி, காந்தி வீதி ஆகிய முக்கிய வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது. இதுதொடர்பாக வணிகர்கள் தரப்பில் விசாரிக்கையில், “நாள்தோறும் ரூ. 200 கோடி வரை வர்த்தகம் நடக்கும். கதவடைப்பால் வர்த்தகம் நடக்கவில்லை. அத்துடன் அரசுக்கு ரூ. 7 கோடி வரை வரிவருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும்“ என்று குறிப்பிட்டனர்.

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் சில கடைகள் வழக்கம் போல இயங்கின. நகரப் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் ஒரு சில கடைகள் வழக்கம் போல திறந்திருந்தன. தனியார் பேருந்துகள், டெம்போக்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடின. பொதுமக்கள், “இந்தக் கதவடைப்பு போராட்டமே அரசுக்கும், வணிகர்கள் கூட்டமைப்புக்கும் ஏற்பட்டுள்ள ஈகோவாலேயே நடந்துள்ளது” என்று குறிப்பிட்டனர்.

Label