OUR CLIENTS
காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டிடவேண்டும்: முதல்வர் பழனிச்சாமி
காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டிடவேண்டும்: முதல்வர் பழனிச்சாமி Posted on 22-Feb-2018 காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டிடவேண்டும்: முதல்வர் பழனிச்சாமி

சென்னை, பிப்.22-
காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சியினரும் தமிழ்நாட்டு மக்களுக்காக ஓரணியில் திரண்டு போராட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இன்று  (22.02.2018) சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், “காவேரி நதிநீர்ப் பிரச்சனை தொடர்பாக எனது அழைப்பினை ஏற்று இக்கூட்டத்திற்கு வருகை தந்துள்ள தங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். காவேரி நதிநீர் போன்ற முக்கியமான பிரச்சனையில் ஆனாலும், பல்வேறு கருத்து வேறுபாடுகள் நம்மிடையே இருந்தாலும், அனைத்து கட்சியினரும் தமிழ்நாட்டு மக்களுக்காக ஓரணியில் திரண்டு, ஒருமித்த கருத்துடன் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு பாடுபடவேண்டும் என்ற எனது விருப்பத்தை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

காவேரி நதிநீர்ப் பிரச்சனை,  காவேரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்து இருக்கிறது.
காவேரிஎன்பது, 
தமிழகத்தின் நிலம் பாய்ந்து, 
நீரோடிப் பாய்கின்ற நதிமட்டும் அல்ல.
அது, தமிழர்களுக்கு
உயிர்த்துடிப்பைத் தருகின்ற ரத்தநாளம்! 
தமிழகம் இயங்கவகைசெய்திடும், 
நரம்பின் ஓட்டம்!
கர்நாடகத்தில் ஆடு தாண்டும் காவேரியாகத் தொடங்கி, தமிழகத்தில் அகண்டகாவேரி ஆகி, தஞ்சை வள நாட்டைத் தாயாகிக் காக்கின்ற தனிக் கருணை நதிதான் காவேரி!
"கோள்நிலைதிரிந்து
கோடைநீடினும்
தன் நிலைதிரியாத்
தந்தமிழ்ப் பாவை"  என்று,
மணிமேகலைக் காப்பியம் போற்றிய காவேரியை, "நடந்தாய்வாழிகாவேரி" என்று, இளங்கோவடிகளால்வாழ்த்தி வரவேற்கப்பட்ட காவேரியை, முழுவதும் தனக்கே சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும் என்ற கர்நாடகத்தின் சுயநலம்தான், காவேரிப் பிரச்சனை உருவாகக் காரணம்! கர்நாடகத்தின் இந்தசுயநலப் போக்கு, இன்றுவரை ஒரு சிறிதும் மாறவில்லை என்பதை, அவர்களது அண்மைக் காலபேச்சுகள் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.

காவேரி வழக்கு வரலாறு நம் அனைவருக்கும் தெரியும். இத்தருணத்தில் விவசாய பெருகுடி மக்களின் நன்மையைக் கருதி காவேரி நீரின் உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுருக்கமாக தெரிவிக்க விரும்புகிறேன். 

1892 ஆம் ஆண்டு மற்றும் 1924 ஆம் ஆண்டைய ஒப்பந்தங்கள் காவேரியில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. 

ஆனால், இந்த ஒப்பந்தவிதிகளைப் பின்பற்றாமல் கர்நாடக அரசு தன்னிச்சையாகப் பல்வேறு அணைக்கட்டுகளைக் கட்டியது. 

மற்ற மாநில விவசாயிகளின் நலனை சிறிதும் கருத்தில் கொள்ளாமல், ஆண்டுக்காண்டு தன்னுடைய விவசாயநிலங்களின் பரப்பினையும், கர்நாடகா அதிகரித்துக் கொண்டேபோனது. 

உச்சநீதிமன்றம், உணர்வுப் பூர்வமான இந்தப் பிரச்சினை குறித்து நடுவர் மன்றத்தை ஏற்படுத்துமாறு, 1990 ஆம் ஆண்டு ஓர் உத்தரவினைப் பிறப்பித்தது. 

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி,  1990 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட, காவேரி நடுவர் மன்றம், 25.6.1991 அன்று ஓர் இடைக்காலஆணையைபிறப்பித்தது.

இந்த இடைக்கால ஆணை தமிழகத்திற்கு சாதகமாக இல்லை என்ற போதிலும், காவேரிப் பாசன விவசாயிகளின் உடனடி நலன் கருதியும், மாநிலங்களுக்கிடையே நல்லுறவு நிலவவேண்டும் என்ற எண்ணத்தோடும், இறுதி ஆணையில் கூடுதலாக நீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ்நாடு இருந்தது. 

ஆனால், கர்நாடக அரசோ, காவேரி நடுவர் மன்ற ஆணை கர்நாடகத்தைக் கட்டுப்படுத்தாது என்று தெரிவித்து, இடைக்கால ஆணையினை அவமதிக்கும் வகையில் ஓர் அவசரச் சட்டத்தினை இயற்றியது.

இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து,  அம்மா அவர்களது தலைமையிலான தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், காவேரிநடுவர் மன்றம் பிறப்பித்த இடைக்கால ஆணை செல்லும் என்றும், கர்நாடக அரசின் அவசரச் சட்டம் செல்லாது என்றும் 22.11.1991 அன்று மத்திய அரசுக்குக் கருத்துரை வழங்கியது. 

அம்மா அவர்களது தலைமையிலான அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை காரணமாக  10.12.1991 அன்று காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை மத்திய அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. 

ஆனால், கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கு காரணமாக, மரபுரிமைப்படி இயல்பாக நமக்குக் காவேரி நதிநீரில் பாசனத்திற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீர் முழுமையாக வழங்கப்படாத நிலையே தொடர்ந்தது.

இந்தச் சூழ்நிலையில், 5.2.2007 அன்றுகாவேரிநடுவர் மன்றம் தனது இறுதி ஆணையைவெளியிட்டதோடு, இந்தஆணையைநடைமுறைப்படுத்துவதற்குஏதுவாக, காவேரிமேலாண்மைவாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றைஅமைக்கவும் பரிந்துரைசெய்தது.

கடந்த 2011 ஆம் ஆண்டில்,  அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், 14.6.2011 அன்று பாரதப் பிரதமர் அவர்களை புதுடெல்லியில் நேரில் சந்தித்து, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும், இந்த ஆணையை நடைமுறைப்படுத்த காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றினை அமைக்க வேண்டும் என்றும், வலியுறுத்தினார்கள். இதனைக் கடிதங்கள் வாயிலாகவும்  அம்மா அவர்கள் பாரதப் பிரதமரை பலமுறை வலியுறுத்தி இருக்கிறார்கள். 

காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடத் தடை இல்லாத சூழ்நிலையில், "உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வந்தபிறகுதான், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினைமத்தியஅரசிதழில்வெளியிடமுடியும்" என்று, மத்தியஅரசுதெரிவித்தது. 

இந்தச் சூழ்நிலையில், காவேரிநடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடவும், காவேரி மேலாண்மைவாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை ஏற்படுத்தவும், மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததுடன், உச்ச நீதிமன்றத்தில் உள்ளமேல் முறையீட்டு மனுவை, துரிதமாக விசாரணைக்குக்  கொண்டுவரவும்,  அம்மா அவர்கள் விரைவான நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

அம்மா அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து எடுத்த உறுதியான நடவடிக்கை காரணமாக உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் காவேரிநடுவர் மன்ற இறுதி ஆணை 19.2.2013 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது என்பதை நான் குறிப்பிட்டுக் கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

இதனைத் தொடர்ந்து காவேரி நடுவர் மன்ற இறுதி  ஆணையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த வழக்கில், தமிழ்நாட்டின் சார்பில் திறம்பட்ட வாதங்களை எடுத்துரைக்கப்பட்டதன் அடிப்படையில், இதன் தீர்ப்பு தமிழகத்திற்கு நலம் பயக்கும் வகையில் அமையும் என்று எதிர் பார்த்திருந்த நிலையில், கடந்த 16.2.2018 அன்றுஉச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட, பிறகு அதை முழுமையாக படித்து சட்ட நிபுணர்களுடனும், துறை சம்மந்தமான அனுபவம் வாய்ந்த அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசித்து என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டியது அரசின்  கடமையாகும். 

அந்த கடமையை அம்மாவின் அரசு கடமை உணர்வோடு கடைப்பிடித்திருக்கிறது. அதற்கு உறுதுணையாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கலந்துபேசி, அவர்களது அரிய ஆலோசனையை பெற அரசு சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டு பெருமைக்குரிய நீங்களும் இங்கே இன்று  வருகை தந்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். அதற்காக அம்மா அவர்களின் அரசு சார்பாக மகிழ்ச்சியையும்,  நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

19.2.2012 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற காவேரி நதி நீர் ஆணைய கூட்டத்தில்,  அம்மா அவர்கள், "ஓரிடத்தில் தங்காமல் பாய்ந்தோடிக் கொண்டிருக்கின்ற நதிநீரை எந்த ஒரு மாநிலமும் தனக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாட முடியாது" என்றுஉச்சநீதிமன்றம் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரைத்ததை சுட்டிக் காட்டிப் பேசியிருக்கிறார்.

உச்சநீதிமன்றம் தற்போது அளித்துள்ள இறுதித் தீர்ப்பில் இதை உறுதி செய்து, பன்மாநில நதிகள் தேசிய சொத்து என்றும், அதை எந்த மாநிலமும் தன் உரிமை கோர இயலாது என்றும், தீர்ப்பளித்துள்ளது.

அதேபோல,  அம்மா அவர்களின் சட்டப் போராட்டத்திற்குக் கிடைத்த அடையாளமாக 6 வாரங்களுக்குள் செயல் திட்டம் வகுத்து காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திடவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

நமக்கு இருக்கின்ற வருத்தமும் ஏமாற்றமும் என்னவென்றால், காவேரிநடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் நமக்கு சொல்லப்பட்ட, 192 டிஎம்சி தண்ணீரின் அளவை,  177.25 டிஎம்சியாக குறைத்திருக்கிறதுஎன்பதுதான். 

அதாவது, தண்ணீரில் 14.75 டிஎம்சியை, பெங்களூர் நகரின் குடிநீர்த் தேவைக்காக கொண்டுசெல்லவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. 

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, கர்நாடகா நமக்கு வழங்க வேண்டும் என்று ஆணையிட்டிருக்கின்ற, 177.25 டிஎம்சி தண்ணீரை, எந்ததடையும் இன்றி, உரியகாலத்தில் நாம் பெறுவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, காவேரிநடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் சொல்லப்பட்ட, 14.75 டிஎம்சிதண்ணீரை குறைத்து உச்சநீதிமன்ற உத்தரவுபிறப்பித்துள்ளது குறித்தும், சட்டவல்லுநர்களின் ஆலோசனையைபெற்றும், 

உங்களின் மேலான கருத்தின்படி என்ன நடவடிக்கை எடுப்பது குறித்து எல்லாம் நாம் கலந்துரையாடி, தமிழகத்திற்கு காவேரியில் இருந்து வரவேண்டிய தண்ணீரை பெறவேண்டும்,  அதன் மூலம் தமிழகமக்களின் மனமும் குளிரவேண்டும். தமிழ் மண்ணும் குளிரவேண்டும், விவசாயிகளின் வேண்டுகோள்களை நிறைவேற்றி அவர்களின் மனங்களையும் குளிரச் செய்யவேண்டும். 

தமிழகத்தின் உரிமைகளை எந்த வகையிலும் ஒரு துளி அளவேனும் விட்டுக் கொடுத்திடாத அம்மாவின் அரசு, உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்த இறுதித் தீர்ப்பின் மீது தேவையான தொடர் நடவடிக்கைகளை விரைவாகவும், உறுதியாகவும் மேற்கொள்ள ஏதுவாக வருகை தந்துள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், விவசாய சங்கங்கள் மற்றும் பிரதிநிதிகள் தற்போது வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாதக பாதகங்கள் குறித்து தங்களின் மேலான ஆக்கப்பூர்வமான கருத்துகளைச் சுருக்கமாகத் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தாங்கள் கூறும் ஆக்கப்பூர்வமான கருத்துகளைச் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

முதல்வர்  உரை முழுவிவரம் இணைப்பு

http://www.tndipr.gov.in/DIPRImages/News_Attach/9833PDIPR-P.R.NO131-Hon_bleCMSpeech-Allpartymeetingregcauvery-Date22.2.2018.pdf

Label