OUR CLIENTS
மப்பேட்டில் காற்று மாசுபாடு ஏற்படுத்தும் தார் தொழிற்சாலை - பல்வேறு நோய்கள் பரவும் அபாயம்! பீதியில் கிராம மக்கள்!!
மப்பேட்டில் காற்று மாசுபாடு ஏற்படுத்தும் தார் தொழிற்சாலை - பல்வேறு நோய்கள் பரவும் அபாயம்! பீதியில் கிராம மக்கள்!! Posted on 28-Feb-2018 மப்பேட்டில் காற்று மாசுபாடு   ஏற்படுத்தும் தார் தொழிற்சாலை - பல்வேறு நோய்கள் பரவும் அபாயம்! பீதியில் கிராம மக்கள்!!

மப்பேட்டில் காற்று மாசுபாடு   ஏற்படுத்தும் தார் தொழிற்சாலை
பல்வேறு நோய்கள் பரவும் அபாயம்! பீதியில் கிராம மக்கள்!!

திருவள்ளூர், பிப்.28-
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் தாலுகா, மப்பேடு குறுவட்டம் மற்றும் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தார் கலவை தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் காற்று மாசுபாடு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் பரவும் அபாயத்தால கிராமமக்கள் பீதியடைந்துள்ளனர்.


மப்பேடு குறுவட்டம் மற்றும் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தார் கலவை தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்பிகே அண்ட் கோ என்ற நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொழில் செய்ய 20 ஏக்கர் நிலத்தை அந்த நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த நிறுவனம் தினமும் மாலை 6 மணிக்கு மேல் அதிகாலை 5 மணி வரை செயல்படுகிறது. தீ ஜூவாலைகள் கொழுந்துவிட்டு எரிகின்றனவாம். இந்த ஜூவாலைகளுக்கு அருகில் அதாவது 100 மீட்டர் தொலைவில் ஹெச்டி எனப்படும் உயர்மின்னழுத்த கம்பிகள் மேலே செல்கின்றன என்று கூறப்படுகிறது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டால் பெரியளவில் ஆபத்து ஏற்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமின்றி இத்தொழிற்சாலையால் இன்சுலேட்டர் மீது அழுக்கு படிவதால் சென்னைக்கு மின்சாரம் கொண்டுசெல்ல பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மின்சாரத்துறைக்கு அதிகமான நட்டமும், செலவும் ஏற்படுகின்றது. 


இதுபோன்ற காற்று மாசுபாடு தொடர்பாக தட்டிக் கேட்டாலும் அந்த நிறுவனம் அளிக்கும் ஒரே பதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த துணை முதல்வரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர்கள்தான் நாங்கள், நாங்கள் எந்த பிரச்னை வந்தாலும் சந்தித்து கொள்கிறோம், அதற்காக தயாராக இருக்கிறோம் என்று தொடை தட்டுகின்றனர். 

இந்த தொழிற்சாலை இயங்குவதால் புழுதி பறக்க தொடங்கி விடுகிறது. இதனால் மப்பேடு, முதுகூர், உளுந்தை, மப்பேடு சமத்துவபுரம், உசேன் நகரம், விஸ்வநாதகுப்பம், கொட்டியூர், நரசமங்கலம் உள்ளிட்ட பல ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த கிராமங்களில் உள்ள நீர்நிலைகளான ஏரி, குளங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதனால் இந்த கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு தோல் நோய், காச நோய், புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்கள் பரவுகின்றன. இந்த நோய்கள் வந்துவிட்டால் விரைவில் குணமாவதும் இல்லை என்கின்றனர் கிராம மக்கள். இந்த கிராமத்தில் வாழவே அச்சப்படுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அப்பாவி கிராம மக்கள். கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி அரசின் பார்வைக்கு அனுப்பியும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கின்றனர் கண்ணீர் மல்க. 

அத்துடன் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், தமிழக முதல்வர், முதல்வர் தனிப்பிரிவு என்று எங்கு சென்று புகார் மனு கொடுத்தும் இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். கிராம மக்கள் என்றால் அரசு அலட்சியம் காண்பிப்பதாக புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதில் முதுகூர் கிராமம் அதிகளவில் இந்த தொழிற்சாலையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு தொழில் நடத்த வருவாய்த்துறையில் முறையாக முன்அனுமதி அதாவது தடையில்லா சான்று பெற வேண்டும். கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர் என்று படிப்படியாக அனுமதி பெற வேண்டியுள்ளது. ஆனால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த தொழிற்சாலை நடத்த எப்படி அனுமதி அளித்தது என்பது மட்டுமே இன்று விடைதெரியாத கேள்வியாக கிராம மக்கள் முன்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதுநாள் வரை இந்த பகுதியில் ஆய்வு நடத்தவே இல்லை. ஆனால் பல மர்மங்கள் இந்த தொழிற்சாலையில் நிறைந்துள்ளது.

தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த தொழிற்சாலை இயங்கி வருகிறது. பகல் நேரங்களில் இயக்கப்படுவதே இல்லை. சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலை இன்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் யார் யார் இந்த தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்களோ அந்த கிராம பஞ்., தலைவர் வீட்டுக்கு ஜேசிபி போன்ற இயந்திரங்களை வழங்கி போராட்டம் செய்யவிடாமல் தடுத்து விடுகின்றனர் ஆலை நிர்வாகத்தினர் என்று சொன்னால் அது மிகையாகாது. அத்துடன் கோயில் விழாக்களுக்கு கனிசமான தொகை வேறு வழங்கிவிடுகிறார்களாம், ஒருபுறம் கொடிய நோய்கள் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவும் நாளடைவில் அதிகரித்து பொதுமக்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக மாறிவிடும் பேராபத்து கண்ணுக்கு தெரியாமல் உருவாகி வருவது கண்டிக்கத்தக்கது. 

அரசு பாராமுகமாக இருக்காமல் இந்த பிரச்னையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதுடன் அந்த தார் தயாரிக்கும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வழிவகை செய்ய வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. கிராம மக்கள்தானே என்று அலட்சியம் காண்பிக்காமல் அரசு உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கொடிய நோய்கள் பரவும் வேளையில் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்கில் தமிழக அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் செயல்படுவது கண்டனத்துக்குரியது என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த தொழிற்சாலையால் யார் பலனடைகிறார்கள், யார் யாரெல்லாம் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை சீர் தூக்கி பார்க்க வேண்டிய அரசு நமக்கென்ன வேலை என்று அலட்சியம் செய்யக் கூடாது என்பதே பாதிக்கப்பட்டுள்ள கிராமமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. 

இந்த தொழிற்சாலை இயங்க ஆரம்பித்ததில் இருந்தே நீர்நிலைகள் கெட்டுப்போக ஆரம்பித்து விட்டன. இப்படி  பல அடுக்கடுக்கான விடை தெரியாத கேள்விகள் தொழிற்சாலை முன் கிராம மக்கள் தரப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஜல்லியை தாருடன் சேர்த்து கலக்குவதால்தான் தூசு பறக்க ஆரம்பித்து விட்டது. இந்த இடமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. நாம் அன்றாடம் சந்திக்கும் சாதாரண பிரச்னைகளை காட்டிலும் இது மக்களின் வாழ்வாதார பிரச்னையாக மெல்ல மெல்ல மாறி வருகிறது. வருவாய்த்துறை முறையாக நடந்து கொண்டாலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் 20 ஏக்கரில் ஒரு பிரமாண்டமான தொழிற்சாலை இரவு நேரங்களில் இடைவிடாமல் நடப்பதை ஏன் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்காமல் மௌனம் சாதித்து வருகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. 

விரைவில் இந்த தொழிற்சாலைக்கு மூடுவிழாவை நடத்திட அரசு முன்வர வேண்டும்.  இதுதான் இந்தப்பகுதி வாழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. அரசின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.                                                                                        

Label