OUR CLIENTS
காவிரி விவகாரம்: எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின் இன்று சந்திப்பு
காவிரி விவகாரம்: எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின் இன்று சந்திப்பு Posted on 03-Mar-2018 காவிரி விவகாரம்: எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின் இன்று சந்திப்பு

சென்னை, மார்ச் 3-
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை ஏற்று, அவரை இன்று தி.மு.க. செயல்தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.  

காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த மாதம் 16-ந் தேதி தனது தீர்ப்பை வழங்கியது.  இந்த தீர்ப்பில், கர்நாடகம் காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறந்து விடவேண்டிய தண்ணீரின் அளவு, நடுவர் மன்றம் நிர்ணயித்து இருந்த 192 டி.எம்.சி.யில் (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) இருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

பாசனத்துக்காக தமிழகம் கூடுதல் தண்ணீர் கேட்டு வந்த நிலையில், நடுவர் மன்றம் நிர்ணயித்து இருந்த நீரின் அளவில் 14.75 டி.எம்.சி.யை சுப்ரீம் கோர்ட்டு குறைத்தது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது. தமிழகத்துக்கு குறைக்கப்பட்ட இந்த 14.75 டி.எம்.சி. நீர் கர்நாடகத்துக்கு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு கர்நாடகத்துக்கு சாதகமாக அமைந்துள்ள போதிலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்று கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 22-ந் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில், அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள், அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்குமாறு வற்புறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 11 மணிக்கு திடீரென்று, தி.மு.க. செயல்தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, காவிரி பிரச்சினையில் தமிழக அரசு அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அவருடன் ஆலோசிக்க விரும்புவதாகவும், எனவே இன்று (அதாவது நேற்று) வர முடியுமா? என்றும் கேட்டார்.

அதற்கு மு.க.ஸ்டாலின், “மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதால் இன்று (அதாவது நேற்று) தன்னால் வர இயலாது” என்று கூறினார்.  இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, சனிக்கிழமை (இன்று ) வர முடியுமா? என்று கேட்க, அதற்கு மு.க.ஸ்டாலின் சம்மதம் தெரிவித்தார்.  அதன்படி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை ஏற்று, மு.க.ஸ்டாலின் இன்று அவரை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு சென்னை கோட்டையில் காலை 10.30 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது.

இந்த சந்திப்பின் போது, எம்.பி.க்கள், விவசாய சங்க தலைவர்களுடன் அனைத்துக்கட்சி குழுவினர் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவது பற்றியும், இது தொடர்பாக அவரிடம் வழங்க இருக்கும் மனுவில் இடம்பெற உள்ள அம்சங்கள் பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் செல்வதாக இருந்தார். மு.க.ஸ்டாலினுடன் இன்று ஆலோசனை நடத்த இருப்பதால், அவர் தனது சேலம் பயணத்தை ரத்து செய்து விட்டார்.   இந்த சூழ்நிலையில், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா வருகிற 7-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடத்த இருக்கிறார்.

Label