அசர்பைஜான்: போதை மறுவாழ்வு மையத்தில் தீ – 30 பேர் பலி Posted on 03-Mar-2018
பாகூ, மார்ச்-
அசர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகூவில் செயல்படும் போதை மறுவாழ்வு மையத்தில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த நெருக்கடி கால அமைச்சகத்தை சேர்ந்த தீயணைப்புப்படை வீரர்கள் மற்றும் மீட்புப் படையினர் போதை மறுவாழ்வு மையத்துக்கு விரைந்தனர். மூன்று மணி நேர கடும் போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. தீயை அணைக்கும் பணியில் 10 தீயணைப்பு வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டன.
தீ விபத்தில் சிக்கி கருகிய 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று அந்நாட்டு நெருக்கடி கால பணிகளுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மீட்புப்படையினர் தீயில் கருகி உயிரிழந்தோரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.