OUR CLIENTS
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சிறப்புத் தீர்மானம்! - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சிறப்புத் தீர்மானம்! - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் Posted on 16-Mar-2018 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சிறப்புத் தீர்மானம்! - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை, மார்ச் 16-

காவிரி மேலாண்மை வாரியத்தையும் ஒழுங்காற்று குழுவையும் 6 வார காலத்தில் மத்திய அரசு அமைக்கவேண்டும் என தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானம் ஏகமனதாக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் விவரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி உடனடியாக கடிதம் எழுதினார்.

2018-2019 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு மாலை 3:30 மணிக்கு தமிழக சட்டமன்ற சிறப்பு அமர்வு கூடியது. இக்கூட்டத்தில் முதலில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார்.

அதன் பிறகு, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அரசு தீர்மானத்தை தாக்கல் செய்தார். விவரம்: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படியும் 16.2.2018ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படியும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு ஆகிய அமைப்புகளை அவற்றுக்கு உரிய முழுமையான அதிகாரங்களுடன் 6 வார காலத்தில் மத்திய அரசு அமைத்து நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை அவையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்மொழிந்தார்.

இந்த தீர்மானத்தை ஒருமனதாக உறுப்பினர்கள் நிறைவேற்றி தரவேண்டும் என்று பேரவைத் தலைவர் வாயிலாக வேண்டுகோள் விடுப்பதாகவும் முதல்வர் கூறினார்.

முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு அளிப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.. ஸ்டாலின் உறுதி அளித்தார். அதன் பேரில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, சட்டமன்ற சிறப்பு அமர்வில் திமுக செயல்தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.. ஸ்டாலின் உணர்ச்சி பொங்க உரையாற்றினார்தமிழகத்தில் உள்ள கட்சிகளும் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று வாரியக்குழுவை 6 வாரங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அம் முடிவு மாநில அரசினால் பிரதமர் அலுவலகத்திற்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரதமர் தமிழக அனைத்துக்கட்சி குழுவையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இந்த முடிவில் ஜனநாயகத்திற்கு நெருக்கடியான தருணம் என்று கருதுகிறேன்.

தமிழக மக்கள் மத்திய அரசின்மீது தாங்கமுடியாத கோபத்துடன் இருக்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட தன்னால் இயன்ற எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க திமுக தயாராக இருக்கின்றது.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மத்திய அரசு பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதும் வருத்தமளிக்கிறது. நீட் தேர்வை பொறுத்தமட்டில் தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக சட்டமே இயற்றப்பட்டது. அதை மத்திய அரசு புறம் தள்ளி செயல்பட்டது.

இந்நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்யத் தயார் என் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.. ஸ்டாலின் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்று சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவால் ஒருமனதாக நேற்று நிறைவேற்றப்பட்டது.

பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்றே கடிதம் அனுப்பினார்.

பட்ஜெட் தினமான நேற்று தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு அமர்வு கூட்டத்தில் காவிரி பிரச்சினை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதை பிரதமர் நரேந்திர மோடிக்கு சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஹிந்தி, ஆங்கில வடிவங்கள் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தீர்மானம்

முன்னரே அறிவித்திருந்தபடி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமை வகித்தார். துணை முதல்வர் . பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். உச்சநீதிமன்றமும், முன்னதாக காவிரி டிரிபியூனலும் தமது தீர்ப்புகளில் கூறியபடி எல்லா அதிகாரங்களுடன் காவிரி மேலாண்மை வாரியத்தையும் ஒழுங்காற்று குழுவையும் 6 வாரக் காலத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் தனியாக நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் மு.. ஸ்டாலின் அறிவித்திருந்தார். சட்டமன்ற சிறப்பு அமர்வுக்கு பின்னர் திமுக எம்எல்ஏக்களின் தனிக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Label