OUR CLIENTS
ஏப்ரல் 5-ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு
ஏப்ரல் 5-ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு Posted on 02-Apr-2018 ஏப்ரல் 5-ம் தேதி  தமிழகத்தில் முழு அடைப்பு

சென்னை, ஏப்.2-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 5ம் தேதி தமிழகத்தில் அனைத்துக் கட்சிசார்பில்  முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க .ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சியான திமுக சார்பில், அதன் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், காவிரி விவகாரம், நியூட்ரினோ ஆய்வு மற்றும் மீத்தேன் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு மற்றும் தி.க. மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. தே.மு.தி.க.விற்கு தி.மு.க. சார்பில் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டது. ஆனால் அனைத்து கட்சி கூட்டத்தில் தே.மு.தி.க. கலந்து கொள்ளவில்லை.


அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின் ஏப்ரல் 5-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் சார்பில் ஏப்ரல் 5ம் தேதி நடத்த இருக்கும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு வணிக சங்க பேரமைப்பினருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று ஸ்டாலின் கூறினார். 

முழு அடைப்பு போராட்டத்துக்கு, அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்படும். ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் போராட்டத்திற்கு வணிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரும் ஆதரவு தர ஸ்டாலின் வலியுறுத்தினார்.

அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் காவிரி உரிமை மீட்பு பயணத்தை நடத்த முடிவுசெய்துள்ளோம். மேலும் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும் போது கருப்புக்கொடி காட்ட முடிவு எடுத்துள்ளோம்.  ஆளுநரை சந்திப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்; தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடக்கிறது. இது எடப்பாடி ஆட்சியா, ஆளுநர் ஆட்சியா என்று தெரியவில்லை என்று  ஸ்டாலின் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.  இதுதொடர்பாக சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் செய்தியார்களிடம் கூறியதாவது:  காவிரி நதிநீர் மட்டுமின்றி பல்வேறு திட்டங்களால் தமிழகத்தை வஞ்சிக்கிறது. தமிழகத்தில் ஆபத்துகளை உருவாக்ககூடிய திட்டங்களை விரட்டி அடிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 11-ம் தேதி கடைகள் அடைக்கப்படும். அரசியல் கட்சியினர் நடத்தும் போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை பங்கேற்காது. ஏப்ரல் 3ம் தேதியும் 5ம் தேதியும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட மாட்டோம். இவ்வாறு வெள்ளையன்  கூறினார்.
இதனிடையே திட்டமிட்டபடி ஏப்ரல் 3ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

அனைத்து கட்சி கூட்டம் முடிந்த பின்னர்,, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் வள்ளுவர் கோட்டம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஸ்டாலின், வீரமணி, திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சி தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.   அப்போது பேசிய மு.க. ஸ்டாலின்,  காவிரி மேலாண்மைவாரியம் அமைக்கும்வரை எங்களை கைது செய்தாலும் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றும் கூறினார்.  இந்த கைதினை கண்டித்து திமுகவினர் அங்கேயே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

இதேபோல, நெல்லையில் திமுக எம்பி கனிமொழி சாலை மறியலில் ஈடுபட்டார். நெல்லை சந்திப்பு அண்ணா சிலை முன்பு இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சை பழைய பேருந்த நிலையம் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் கைதுசெய்யப் பட்டதையடுத்து கும்பகோணத்தில் திமுகவினர் சாலை மறியல் ஈடுப்பட்டனர். நெல்லை, திருவாரூர், விழுப்புரத்தில் மறியலில் ஈடுப்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல, ஸ்டாலின் கைதினை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வள்ளுவர் கோட்டத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசர், திருமாவளவன், கி.வீரமணி, முத்தரசன், உதயநிதி உட்பட பலரும் விடுவிக்கப்பட்டனர். இதேபோல் நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. எம்.பி கனிமொழியும் விடுதலை செய்யப்பட்டார்.

Label