OUR CLIENTS
தீபக் மிஸ்ராவை எதிர்த்து தீர்மானத்தில் கையெழுத்திடும் எம்பிக்கள் வழக்கறிஞராக பணியாற்ற முடியாது
தீபக் மிஸ்ராவை எதிர்த்து தீர்மானத்தில் கையெழுத்திடும் எம்பிக்கள் வழக்கறிஞராக பணியாற்ற முடியாது Posted on 02-Apr-2018 தீபக் மிஸ்ராவை எதிர்த்து தீர்மானத்தில் கையெழுத்திடும்  எம்பிக்கள் வழக்கறிஞராக பணியாற்ற முடியாது

புதுடெல்லி, ஏப்.2-

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தில் கையெழுத்திடும் எம்பிக்கள் இனி வழக்கறிஞராக பணியாற்ற முடியாது என இந்திய பார் கவுன்சில்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பவர் தீபக் மிஸ்ரா. இவர் சக நீதிபதிகளுக்கு வழக்குகள் ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகிய 4 பேரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து குற்றஞ்சாட்டினர். இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். 

இந்நிலையில், தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இந்த தீர்மானத்தை ஆதரிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

காங்கிரஸின் இந்த முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நீதிபதி ஒருவரை பதவி நீக்குவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு, மாநிலங்களவை என்றால் 50 எம்பிக்களின் ஆதரவும், மக்களவை என்றால் 100 எம்பிக்களின் ஆதரவும் தேவை.

இந்நிலையில், இந்தியா பார் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா எதிர்ப்பு தீர்மானத்தில் கையெழுத்திடும் எம்.பி.க்கள் இனி வழக்கறிஞராக பணியாற்ற முடியாது என இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா  எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா பார் கவுன்சிலின் உத்தரவு அனைத்து வழக்கறிஞர்களுக்கும் பொருந்தும் என மனன்குமார் மிஸ்ரா கூறியுள்ளார்.  

பார் கவுன்சிலின் இந்த எச்சரிக்கையின் மூலம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக தீர்மானத்தில் கையெழுத்திடுவோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Label