OUR CLIENTS
காவிரி உரிமைக்கான போராட்டங்களை மிரட்டி ஒடுக்க ஆட்சியாளர்கள் துடிப்பதா?
காவிரி உரிமைக்கான போராட்டங்களை மிரட்டி ஒடுக்க ஆட்சியாளர்கள் துடிப்பதா? Posted on 02-Apr-2018 காவிரி உரிமைக்கான போராட்டங்களை மிரட்டி ஒடுக்க ஆட்சியாளர்கள் துடிப்பதா?

சென்னை, ஏப்.2-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையிலும், எலியட்ஸ் கடற்கரையிலும் நேற்று முன்தினம் இரவு போராட்டம் நடத்திய இளைஞர்களும், இளம் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை மூட ஆணையிட்டுள்ள அரசு, கடற்கரைகளில் நடைபயிற்சிக்கு வந்தவர்களையும் சோதனை என்ற பெயரில் அவதிப்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு முடிவடைந்துவிட்ட நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததால் தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோபமும், கொந்தளிப்பும் ஏற்பட்டிருக்கிறது. அதை போராட்டங்களின் மூலமாகத் தான் வெளிப்படுத்த முடியும். அதன்படி சென்னைக் கடற்கரைகளில் போராட்டம் நடத்திய இளைஞர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்திருப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாததாகும்.

குப்புறத் தள்ளியக் குதிரை குழியும் பறித்த கதையாக, காவிரி மேலாண்மை அமைக்கும் விஷயத்தில் தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்த்த பினாமி ஆட்சியாளர்கள், இப்போது காவிரி உரிமைகளை மீட்பதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களையும் ஒடுக்க முயல்வது தமிழகத்திற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரும் போராட்டத்தை நடத்துவதற்கான சிறந்த இடம் மெரினா கடற்கரை தான். ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் கூடி அறவழியில் நமது உணர்வுகளை மெரினா கடற்கரையில் தான் வெளிப்படுத்த முடியும். இத்தனை சாதகமான காரணங்கள் இருக்கும் போதிலும் அங்கு போராட்டம் நடத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிக்க அரசு துடிப்பது ஏன்? ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசியாக செயல்பட்டு மத்திய ஆட்சியாளர்களை குளிர்விக்க தமிழக ஆட்சியாளர்கள் விரும்புவது தான் அனைத்துக்கும் காரணம் ஆகும். பதவி சுகத்தை தொடர்ந்து அனுபவிப்பதற்காகவும், ஊழலில் திளைப்பதற்காகவும் சொந்த மாநிலத்தின் நலனுக்கு எதிராக செயல்படுவது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதாகும். இத்தகைய துரோகத்தை செய்யும் பினாமி அரசை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

காவிரிப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்களிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை இத்தகைய தடைகளின் மூலம் தடுக்க முடியாது. அனைத்துத் தடைகளையும் முறியடித்து காவிரி உரிமைக்கான போராட்டம் வெற்றி பெறப் போவது உறுதி. அத்தகைய போராட்டங்களுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிக்காவிட்டாலும் கூட, அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடாமல் இருப்பதன் மூலம் காவிரி பிரச்சினையில் இதுவரை செய்த துரோகங்களுக்கு பரிகாரம் தேட பினாமி அரசு முயல வேண்டும். கடற்கரையில் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Label