மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள்களை அகற்ற ஆட்சியர் உத்தரவு! Posted on 02-Apr-2018
வேலூர், ஏப்.2-
மாவட்டம் முழுவதும் மின் கம்பங்கள், சாலை வழித் தடங்களில் கட்டப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களின் கேபிள் வயர்களை ஒருவார காலத்துக்குள் அகற்றிட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் மின் கம்பங்கள், சாலை வழித் தடங்களைப் பயன்படுத்தி, தனியார் நிறுவனங்களின் கேபிள் வயர்கள் அதிகளவில் கட்டப்பட்டுள்ளன. இதற்கு முறையாக அனுமதி எதுவும் பெறப்படவில்லை. இதனால், மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகளை பழுதுபார்த்தல், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் போது இடையூறு ஏற்படுகின்றன.
எனவே, மாவட்டத்துக்கு உள்பட்ட தெருவிளக்கு, மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள மற்றும் சாலை வழித் தடங்களில் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்படும் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கேபிள்களை அதன் உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து ஒருவார காலத்துக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அப்புறப்படுத்தி அந்த கேபிள்கள் பறிமுதல் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.