OUR CLIENTS
காவிரி விவகாரம் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக போராட வேண்டும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
காவிரி விவகாரம் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக போராட வேண்டும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் Posted on 03-Apr-2018 காவிரி விவகாரம்  மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக போராட வேண்டும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை,  ஏப்.3-

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களில் திமுகவினர், தோழமைக் கட்சிகள், விவசாயிகள், தொழிற்சங்கத்தினர் என அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


   இதுதொடர்பாக நேற்று திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்:
தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்னையான காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் வஞ்சகத்தையும், தமிழக அரசின் அடிமைத்தனத்தையும் கண்டு பொதுமக்கள் கடும் சினம் கொண்டுள்ளதை எந்தப் பக்கம் திரும்பினாலும் உணர முடிகிறது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தி, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறலாமா என  மத்திய அரசு, தமிழ்நாட்டை மாற்றாந்தாய் போக்குடன் நடத்தி வருகிறது.

 காவிரி விவகாரத்தில் எவ்வித அரசியல் காரணங்களுக்கும் இடம்தராமல் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப எதிர்க்கட்சியான திமுக பல முயற்சிகளை மேற்கொண்டும், மாநிலத்தை ஆள்பவர்கள் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதால், தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது.

 தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்துள்ள மத்திய அரசு, இப்போது "விளக்கம் கேட்கிறோம்" என்ற பெயரில் “மூன்று மாத கால அவகாசம்” கோரியும், “நடுவர் மன்றம் உத்தரவிட்ட காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மாறாக வேறு ஒரு ஸ்கீமை மத்திய அரசு உருவாக்கலாமா” என்றும், தமிழகத்தின் காவிரி உரிமையை அடியோடு நீர்த்துப்போக வைக்கும் விளக்கத்தையும் உச்ச நீதிமன்றத்திடம் கேட்டிருக்கிறது.

 இது விளக்கமல்ல, விதண்டா வாதம். குறிப்பாக, கர்நாடாகாவில்  தேர்தல் நடக்கும் நேரத்தில் இந்த ஸ்கீமை உருவாக்கினால் கலவரம் வரும், என்று மத்திய அரசே கற்பனை செய்துகொண்டு உச்ச நீதிமன்றத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

 மத்திய அரசின் செயல்பாடுகளால் பொதுமக்களிடம் எழுந்துள்ள எதிர்ப்பு மற்றும் பாஜக அரசு மீது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் ஆகிய சிக்கல்களில் இருந்து, மத்திய அரசை எப்பாடு பட்டாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, “நாடாளுமன்ற ஆர்ப்பாட்டம்” எனும் ஓரங்க நாடகத்தை அதிமுக நடத்தியது.

 அதிமுகவில் 50 எம்.பி.க்கள் இருந்தும் மத்திய அரசுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்க முடியாமல், அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருப்பது எல்லாம் அதிமுகமத்திய அரசுடன் கைகோர்த்துக் கொண்டு தமிழக சரித்திரத்தில், இதுவரை காணாத துரோகம் செய்வதை உறுதி செய்கிறது.

 தமிழ்நாட்டிற்கு பிரதமர் வரும்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், வேண்டுமென்றே நடுவர் மன்றம் அமைக்காமல் இருக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, அனைத்துக் கட்சிகள் சார்பில், பிரதமருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், “கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்” நடத்துவது என்றும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானிக்கிறது;

 இது, திமுகவின் தனியுரிமைப் போராட்டமல்ல. தமிழக மக்களின் வாழ்வுரிமைப் போர். அதனால், ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கானப் பரப்புரையை விரைந்து மேற்கொண்டு, முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிபெறச் செய்து மத்திய - மாநில அரசுகளின் முகமூடியைக் கிழித்தெறிந்திட வேண்டும் என மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Label