OUR CLIENTS
கூட்டுப்பயிற்சியில் பங்கேற்க தென்கொரிய கடலோர காவல் படை கப்பல் சென்னை வருகை
கூட்டுப்பயிற்சியில் பங்கேற்க தென்கொரிய கடலோர காவல் படை கப்பல் சென்னை வருகை Posted on 04-Apr-2018 கூட்டுப்பயிற்சியில் பங்கேற்க தென்கொரிய கடலோர காவல் படை கப்பல் சென்னை வருகை

சென்னை, ஏப்.4-
  
வங்கக்கடலில் 5-ந் தேதி நடக்கும் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்பதற்காக தென்கொரிய கடலோர காவல் படை கப்பல் சென்னைக்கு வந்தது. அதில் வந்த அதிகாரிகள், வீரர்களுக்கு இந்திய கலாசாரப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய கடலோர காவல் படை, தென்கொரியா நாட்டு கடலோர காவல் படையுடன் இணைந்து கடலோர பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, இருநாட்டு கடலோர காவல் படைகளும் இணைந்து கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.  அந்தவகையில், சென்னை துறைமுகத்தில் இருந்து சுமார் 20 கடல் மைல் தூரத்தில் வங்கக்கடலில் இந்தியா- தென்கொரிய கடலோர காவல்படையின் 6-வது கூட்டுப்பயிற்சி 5-ந் தேதி நடக்கிறது.

இதற்காக, தென்கொரியாவில் இருந்து அந்த நாட்டின் கடலோர காவல் படைக்கு சொந்தமான ‘பதாரோ’ கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்தது. இதில் தென்கொரிய கடலோர காவல் படை அதிகாரி ஓ தேயோக் தலைமையில் 88 வீரர்கள் வந்துள்ளனர்.   அவர்களுக்கு இந்திய கடலோர காவல் படை சார்பில் இந்திய கலாசாரப்படி சந்தனமாலை அணிவித்து, நெற்றியில் திலகம் இட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு கிழக்கு கடலோர காவல் படை டி.ஐ.ஜி., ரகுவன்ஷி நினைவு பரிசுகளை வழங்கினார். வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் இருநாட்டு கொடிகளையும் அசைத்து வரவேற்றனர்.

இப்பயிற்சியின் போது கடல் பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளுதல், கடல் கொள்ளைகளை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ள இருக் கின்றனர். அத்துடன், இருநாட்டு வீரர்களும் தங்களுடைய கல்வி, தொழில்நுட்ப திறன்களை பரஸ்பரம் பரிமாறி கொள்வதோடு, தங்களுடைய பணி அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர். மேலும், தென்கொரிய கடலோர காவல்படையினர் மாமல் லபுரத்துக்கு கலாசார சுற்றுலாவும் செல்கின்றனர்.

இந்திய கடலோர காவல்படையின் ஐ.சி.ஜி.எஸ் சவுரியா, ஐ.சி.ஜி.எஸ் ராணி அபக்கா, ஐ.சி.ஜி.எஸ் அபீக் ஆகிய ரோந்து கப்பல்களும், டார்னியர் ரக விமானங்கள் மற்றும் சேத்தக் ரக ஹெலிகாப்டர்கள் ஆகியவை இக்கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுத்தப்படுகின்றன. இருநாட்டு வீரர்களுக்கு இடையே கைப்பந்து போட்டியும் நடக்கிறது.   கூட்டுப்பயிற்சியை இந்திய கடலோர காவல்படையின் இயக்குனர் ஜெனரல் ராஜேந்திர சிங், தென்கொரிய கடலோர காவல் படை ஆணையர் ஜெனரல் பார்க் கியூங், இந்திய கடலோர காவல் படை கிழக்கு பிராந்திய ஐ.ஜி. ராஜன் பர்கோத்ரா ஆகியோர் பார்வையிடுகின்றனர். கூட்டுப்பயிற்சியை முடித்துக்கொண்டு 6ம்  தேதி தென்கொரிய படையினர் தாயகம் திரும்பி செல்கின்றனர்.

Label