OUR CLIENTS
தமிழக வானொலிகளில் அப்பட்டமான இந்தித் திணிப்பு ராமதாஸ் கண்டனம்
தமிழக வானொலிகளில் அப்பட்டமான இந்தித் திணிப்பு ராமதாஸ் கண்டனம் Posted on 04-Apr-2018 தமிழக வானொலிகளில் அப்பட்டமான இந்தித் திணிப்பு  ராமதாஸ் கண்டனம்

சென்னை, ஏப்.4-

தமிழக வானொலிகளில் அப்பட்டமான இந்தித் திணிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் நேற்று விடுத்துள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டிலுள்ள உள்ளூர் வானொலி நிலையங்கள் மூலம் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் இந்தி மொழி நிகழ்ச்சிகளின் அளவு அண்மைக் காலங்களில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் தமிழ் நிகழ்ச்சிகள் திட்டமிட்டும், அப்பட்டமாகவும் குறைக்கப்பட்டு வருகின்றன. இது கண்டிக்கத்தக்கதாகும்.

சாலைகளில் செல்பவர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களிடம் உள்ள பொருட்களைப் பறித்துச் செல்வதைப் போன்று, தமிழ்நாட்டு மக்களை எந்த நேரமும் பரபரப்பாகவும், பதற்றமாகவும் இருக்கும் சூழலுக்கு ஆளாக்கிவிட்டு, அவர்கள் கவனம் முழுவதும் அதில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியைத் திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள சென்னை, திருச்சி, தருமபுரி, நாகர்கோவில் வானொலி நிலையங்களில் வர்த்தக ஒலிபரப்பு என்பது கிட்டத்தட்ட இந்தி மயமாக்கப்பட்டு விட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டு வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகளில் அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சி என்பது வர்த்தக ஒலிபரப்பு தான். திரைப்பட பாடல்கள் சுவையான தகவல்களுடன் தொகுத்து வழங்கப்படுவதை அனைத்துத் தரப்பு மக்களும் ரசித்துக் கேட்பது வழக்கம். வயல்வெளிகளில் வேலைக்கு செல்பவர்கள், ஊர் ஊராகச் சென்று வணிகம் செய்பவர்கள் உள்ளிட்டோருக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கே இந்த நிகழ்ச்சிகளும், தமிழ்ச் செய்திகளும் தான். ஆனால், அவையெல்லாம் இப்போது பழங்கதையாகிவிட்டன..

சந்தேஷ் டு சோல்ஜர்ஸ் நிகழ்ச்சி ராணுவத்தினருக்கு வாழ்த்துக் கூறும் நிகழ்ச்சியாகும். தேசப் பற்றை வளர்க்க இத்தகைய நிகழ்ச்சிகள் அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இந்நிகழ்ச்சியை இந்தியில் தான் ஒலிபரப்ப வேண்டும் என்று என்ன கட்டாயம்? இதே நிகழ்ச்சியை இன்னும் சுவையாக தமிழில் நடத்தினால் ராணுவ வீரர்களின் தியாகம் குறித்து தமிழ்நாட்டு மக்களும் அறிந்து கொள்ள முடியும். ஆனால், அதை செய்ய மத்திய அரசும், வானொலி நிலையங்களும் தயாராக இல்லை. அதேபோல், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீர் திடீரென பிரதமரின் இந்தி உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இவற்றின் மூலம் தேசப்பற்று ஊட்டப்படுவதாக வானொலி நிர்வாகத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல.... தேசப்பற்று என்ற பெயரில் தமிழ்நாட்டின் மீது இந்தி திணிக்கப்படுகிறது.

ஆங்கிலேயர் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்தபோதுகூட இன ரீதியாகவும், மொழி சார்ந்தும் இத்தகையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில்லை. ஆனால், தமிழர்களை அடிமைகளைவிடக் கேவலமாக நடத்தும் மத்திய அரசு, தொடர்ந்து நமது உரிமைகளைப் பறிப்பது, நமக்கு உடன்பாடற்ற மொழி மற்றும் கலாச்சாரங்களைத் திணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இது நாட்டின் ஒருமைப்பாடு, நல்லிணக்கம், வேற்றுமையில் ஒற்றுமை காணும் உணர்வு ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பதாகும்.

26.10.2014 ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் 7 மணி நேரம் சென்னை மண்டல வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை உள்ளூர் வானொலிகள் மறு ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்று சென்னை வானொலி நிலைய கூடுதல் தலைமை இயக்குனர் ஆணையிட்டார். இதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் இதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாகவும் 24.10.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்தேன். இதைத் தொடர்ந்து இந்தித் திணிப்பை கைவிட்டிருந்த மத்திய அரசு இப்போது மீண்டும் திணிக்கத் தொடங்கியுள்ளது.

ஜனநாயகத்தின் அடிப்படையே மக்களின் விருப்பத்திலும், உரிமைகளிலும் குறுக்கீடு செய்யாமலிருப்பதுதான். ஆனால், ஜனநாயகத்தை மதிக்காமல் தமிழ்நாட்டில் வானொலி நிகழ்ச்சிகள் மூலம் இந்தியைத் திணிப்பதை அனுமதிக்க முடியாது. இதைக் கைவிட்டு தமிழகத்திலுள்ள வானொலி நிலையங்களின் மூலம் தரமான தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப மத்திய அரசும், பிரசார் பாரதியும் முன்வர வேண்டும்.  இவ்வாறு, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Label