OUR CLIENTS
மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்பு - பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் மீது தாக்குதல்
மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்பு - பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் மீது தாக்குதல் Posted on 05-Apr-2018 மத்திய அரசைக் கண்டித்து  தமிழகத்தில் முழு அடைப்பு - பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் மீது தாக்குதல்

 சென்னை, மார்ச் 5-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் நிலையில் புதுச்சேரியிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

முழு அடைப்புப் போராட்டத்தால் புதுச்சேரி அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் முழுவதுமாக இயக்கப்படவில்லை. சென்னையில் இருந்து வந்த தமிழக அரசு விரைவுப் பேருந்து மீது நெல்லித்தோப்பு சிக்னல் அருகே மர்ம ஆட்கள் கல்வீசித் தாக்கினர்.  இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன. இதேபோல் அண்ணா நகர், முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளிலும் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. 5 அரசு பேருந்துகளும் ஒரு தனியார் பேருந்தும் தாக்குதலுக்குள்ளாயின. இந்தத் தாக்குதல்களில் ஓட்டுநர் ஒருவரும் நடத்துநர் ஒருவரும் காயமடைந்தனர். இதையடுத்துப் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் காவல்துறையினர் பாதுகாப்புடன் மறைமறையடிகள் சாலையில் உள்ள பணிமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டன.

திண்டுக்கல்லில் இருந்து திருச்சி மாவட்டம் முசிறி நோக்கிச் சென்ற அரசு பேருந்து சீலப்பாடி அருகே வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆட்கள் பேருந்தின் மீது கல்வீசித் தாக்கினர். பேருந்தின் கண்ணாடி உடைந்ததால் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினர். அதேபோல் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து நந்தவனப்பட்டி அருகே வந்தபோது மர்ம ஆட்கள் கண்ணாடிகளை உடைத்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிச் சென்னையில் மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வேப்பேரி ஈவெகி சம்பத் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த மாநகரப் பேருந்துகள் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். இதில் 6மாநகரப் பேருந்துகளின் முன்புறக் கண்ணாடிகள் முழுவதும் உடைந்தன. இது குறித்து வேப்பேரிக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கண்ணாடி சேதமடைந்த பேருந்துகள் அந்தந்தப் பணிமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மணலி நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்து காசிமேட்டில் வந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கல்வீசித் தாக்கினர். பேருந்தின் கண்ணாடி உடைந்ததால் பயணிகள் அலறியடித்து ஓடினர். தகவல் அறிந்த காசிமேடு மீன்பிடி துறைமுகக் காவல்துறையினர் விரைந்து வந்து பேருந்தை மீட்டுப் பணிமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வேலூர் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்த அரசு பேருந்துகள் மீது மர்ம ஆட்கள் கல்வீசித் தாக்கினர். இதில் 8 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கேவி குப்பத்தில் தமிழக அரசு பேருந்தின் மீதும், குடியாத்தத்தில் ஆந்திர அரசுப் பேருந்து மீதும் நடைபெற்ற தாக்குதலில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் அனைத்துப் பேருந்துகளும் பணிமனைகளில் நிறுத்தப்பட்டன. பேருந்துகள் ஓடாததால் வேலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திருச்சியில் இருந்து இராமேஸ்வரத்துக்குச் சென்ற அரசு பேருந்தின் மீதும், மதுரையில் இருந்து தேவகோட்டைக்குச் சென்ற அரசு பேருந்தின் மீதும் மர்ம ஆட்கள் கல்வீசித் தாக்கினர். இதில் 2பேருந்துகளின் பின்பக்கக் கண்ணாடிகள் உடைந்தன. இது தொடர்பாகக் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 6பேரைக் காரைக்குடி காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டியில் 2 அரசு பேருந்துகள், 2 லாரிகள் மீது மர்ம ஆட்கள் கல்லெறிந்ததில் அவற்றின் கண்ணாடி உடைந்தன. இது தொடர்பாக 2பேரைப் பிடித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தாரமங்கலத்தில் இருந்து சேலத்துக்கு வந்த அரசு பேருந்து மீது மர்ம ஆட்கள் கல்வீசித் தாக்கியதில் பேருந்தின் கண்ணாடிகள் முழுவதும் உடைந்தன. இது தொடர்பாக ஓமலூர் காவல்துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் படையினர் திமுக பிரமுகரான வெங்கட் என்பவரைப் பிடித்துத் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த வெங்கட் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளார்.


Label