OUR CLIENTS
21 ஆவது காமன்வெல்த் போட்டிகள் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம்
21 ஆவது காமன்வெல்த் போட்டிகள் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம் Posted on 05-Apr-2018 21 ஆவது காமன்வெல்த் போட்டிகள்  பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம்

 கோல்ட் கோஸ்ட், ஏப்.5
ஆஸ்திரேலியாவில் நடக்கும் 21ஆவது காமன்வெல்த் போட்டியின் பளுதூக்கும் போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். மேலும் மற்றொரு பிரிவில் இந்திய வீராங்கனை வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன்மூலம், பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

உலகின் 3ஆவது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரான கோல்ட்கோஸ்டில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த போட்டியில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 வீரர், வீராங்கனைகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

காமன்வெல்த் போட்டியின் துவக்க விழாவில் சிறப்பு அம்சமாக 71 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் அணிவகுத்து வந்தனர். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்திய அணிக்கு தலைமை தாங்கி மூவர்ண கொடியுடன் கம்பீரமாக அணிவகுத்து வந்தார்.

முதல் பதக்கம் :
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான பளு தூக்குதல் போட்டியில் (56 கிலோ) இந்தியாவின் குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார். இப்பிரிவில் 28 வயதான குருராஜா மொத்தம் 249 கிலோ எடையை தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மலேசியாவை சேர்ந்த முகமது இசார் அகமது 261 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். அத்துடன் காமன்வெல்த் போட்டியில் புதிய சாதனையையும் படைத்தார். இலங்கையின் சதுரங்கா லக்மல் 248 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

பின்னர் பேசிய இந்திய வீரர் குருராஜா,”இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கான பதக்கப்பட்டியலை துவக்கிவைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று பெருமிதத்துடன் கூறினார்.

முதல் தங்கம்:
48 கிலோ எடைப்பிரிவில் மகளிர் பளுதூக்கும் போட்டி அதைத்தொடர்ந்து நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கப் பதக்கத்தை வென்றார். இந்த போட்டியில் காமன்வெல்த் அளவில் 3 புதிய சாதனைகளை படைத்து மீராபாய் சானு சாதனை படைத்து உள்ளார்.

இதில் 103 கிலோ, 107 கிலோ, 110 கிலோ எடைகளை எளிதில் தூக்கி சாதனைப்படைத்தார். மொத்தம் 196 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 194 கிலோ எடையை தூக்கி உலக சாதனைப் படைத்திருந்தார். இந்நிலையில், தனது சாதனையை இன்று நடந்த போட்டியில் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முதலிடம்
தற்போது நடைபெற்றுகொண்டிருக்கும் இந்த 21 ஆவது காமன்வெல்த் போட்டிகளில் பளு தூக்குதல் போட்டிகளில் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது. இதன் மூலம் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி பதக்கங்கள் வென்றுள்ள மீராபாய் மற்றும் குருராஜாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி டுவிட்டரில்,”2018 காமன்வெல்த் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற சாய்க்கோம் மீராபாய் சானுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் காமன்வெல்த் போட்டிகளில் 3 சாதனைகளை மீராபாய் படைத்துள்ளார். இந்த சாதனைகளால், இந்தியா பெருமிதம் அடைகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,”2018 காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை ஆடவர் 56 கிலோ எடைப்பிரிவிலான பளு தூக்குதல் போட்டியில் குருராஜா பெற்றுள்ளார். வெள்ளிப் பதக்கத்தை தட்டிச்சென்ற குருராஜாவை நினைத்து பெருமைப் படுகிறோம்” என்று டுவிட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Label