OUR CLIENTS
கர்நாடகத்தில் துணைவேந்தராக தமிழரை நியமிக்க முடியுமா?- ராமதாஸ் கேள்வி கணைகள்
கர்நாடகத்தில் துணைவேந்தராக தமிழரை நியமிக்க முடியுமா?- ராமதாஸ் கேள்வி கணைகள் Posted on 06-Apr-2018 கர்நாடகத்தில் துணைவேந்தராக தமிழரை நியமிக்க முடியுமா?-  ராமதாஸ் கேள்வி கணைகள்

சென்னை,  ஏப்.6-
           அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கர்நாடகாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு தமிழரை துணைவேந்தராக நியமிக்க முடியுமா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில்,  தமிழ்நாட்டின் முதன்மை பல்கலைக்கழகமும், தேசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ள நிறுவனமுமான அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்து ஆளுநர் ஆணையிட்டுள்ளார். அவரை நியமிக்கக்கூடாது என பாமக வலியுறுத்தியிருந்த நிலையில், அப்பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்நியமனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது, திரும்பப்பெறப்பட வேண்டியதாகும்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் மிகப்பெரிய மோசடியாகும். துணைவேந்தர் பதவிக்கு வியாழக்கிழமை நேர்காணல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், புதன்கிழமையே புதிய துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்படுவதாக செய்திகள் வெளியாயின. சூரப்பாவும் தமக்கு நெருக்கமானவர்களிடம் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.  ஒருவேளை இது யூகம் என்றால் கூட சூரப்பாவே இதை உறுதி செய்தது எப்படி?

கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமிக்கக் கூடாது என்று பாமக வலியுறுத்தியிருந்தது. இதை ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டது தொடர்பான அறிவிப்பு மட்டுமின்றி, அவரது துதி பாடும் வகையில் அவரைப் பற்றியக் குறிப்புகள் இடம் பெற்றிருந்தன. ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதைப் போன்று சூரப்பா மெச்சத்தக்க நிர்வாகியோ, கல்வியாளரோ அல்ல.

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன இயக்குனராக பணியாற்றியபோது பெரும்பாலான நாட்களில் பணிக்கு வராதது, 2. நிர்வாகம் சார்ந்த முடிவுகளை விரைந்து எடுக்காதது, 3. பஞ்சாப் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.760 கோடி ஒதுக்கப்பட்ட போதிலும், 5 ஆண்டுகளாக அதைப் பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டது. இதனால் கட்டுமான செலவு மதிப்பீடு ரூ.1,958 கோடியாக உயரக் காரணமாக இருந்ததாக இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் கண்டனத்திற்கு ஆளானது, 6. பிற ஆராய்ச்சி நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை தமது கண்டுபிடிப்பாக காட்டியது, 7. பேராசிரியர்களை மரியாதைக் குறைவாக நடத்தியது என இவர் மீது ஏராளமான புகார்கள் உள்ளன.

ஒருவேளை இதுதான் தேசப்பற்று என்று தமிழக ஆளுநர் கருதுவாரேயானால், சூரப்பாவை விட திறமையும், தகுதியும் அதிகமாக உள்ள 25 பேராசிரியர்கள் பட்டியலை ஆளுநரிடம் பாமக ஒப்படைக்கத் தயார்.

தமிழனுக்கு எதிராக இவ்வளவு துரோகங்கள் இழைக்கப்படும் நிலையில், தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஒருவர்பின் ஒருவராக அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களை நியமிப்பது தமிழர்களின் தன்மானம் மற்றும் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகும். இவற்றையெல்லாம் பதவி சுகத்தை அனுபவிப்பதற்காக எடப்பாடியும், பன்னீர்செல்வமும் வேண்டுமானால் சகித்துக் கொள்ளலாம். மக்கள் சகிக்க மாட்டார்கள்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதை தமிழக ஆளுநர் ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய மறுத்தால் அவருக்கு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்கக் கூடாது. இந்த அநீதிக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும்.  சூரப்பா கர்நாடகத்துக்கு திருப்பி அனுப்பப்படவில்லையென்றால் பாமக மாணவர்களைத் திரட்டி போராடும்.  இவ்வாறு, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Label