OUR CLIENTS
பெண் நிருபரின் கன்னத்தை தட்டியதுக்கு மன்னிப்பு கேட்டார் ஆளுநர்!
பெண் நிருபரின் கன்னத்தை தட்டியதுக்கு மன்னிப்பு கேட்டார் ஆளுநர்! Posted on 18-Apr-2018 பெண் நிருபரின் கன்னத்தை  தட்டியதுக்கு மன்னிப்பு கேட்டார் ஆளுநர்!

சென்னை, ஏப்.18-

பெண் நிருபரின் கன்னத்தை தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் இன்று மன்னிப்பு கோரியுள்ளார். 

 அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது, காவிரி மேலாண்மை வாரியம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், சென்னை ராஜ்பவனில் செய்தியாளர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று    சந்தித்தார்.

 செய்தியாளர் சந்திப்பு முடிந்தபிறகு, அவர் அருகே ஒரு வார பத்திரிகையின் மூத்த நிருபர் உட்பட சில பெண் நிருபர்கள் அவரிடம் சில கேள்விகளை கேட்க முயன்றனர்.  அப்போது, கவர்னர் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், அங்கு நின்றிருந்த பெண் நிருபரின் கன்னத்தை சிரித்தபடி, கையால் தட்டிவிட்டு சென்றார்.

 இதை கண்டிக்கும் வகையில் அந்த பெண் நிருபர் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டார். அதில், "கவர்னர் தன்னை தாத்தாவாக நினைத்து என் கன்னத்தை தட்டி இருக்கலாம். ஆனால் நான் இதை ஏற்கவில்லை. என் முகத்தை நான் பலமுறை கழுவினால் கூட இந்த தாக்கத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை. அவர் செய்தது தவறு" என்று குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக ஆளுநருக்கும் இமெயில் மூலம் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். 

 இதனையடுத்து ஆளுநரின் இந்த செயலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்கள் குவியத் தொடங்கியுள்ளன. 

 மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைபிடிப்பது அவசியம். பெண் பத்திரிக்கையாளரின் அனுமதி இல்லாமல், அவரை தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை" என கனிமொழி பதிவிட்டுள்ளார். 

 அதேபோல, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு இந்திய பெண் பத்திரிகையாளர் கூட்டமைப்பினர் கடும்  அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். பத்திரிகையாளர் சந்திப்பிலேயே ஒரு பெண் நிருபரின் கன்னத்தை ஆளுநர் தட்டியது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், ஆளுநரின் இந்த செயலானது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஒப்பானது என்றும் அக்கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

 இதேபோன்று, பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

 இதையடுத்து இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்நிலையில் பெண் நிருபரின் கன்னத்தில் தட்டியதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மன்னிப்பு கேட்டுள்ளார்.
 
 இதுதொடர்பாக ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "40 ஆண்டுகளாக நான் பத்திரிகை துறையில் இருந்துள்ளேன். செய்தியாளர் சந்திப்பில் நல்ல கேள்வி கேட்டதற்காக பாராட்டி பெண் நிருபரின் கன்னத்தை தட்டினேன். என் பேத்தி போல் நினைத்து அவரது கன்னத்தில் தட்டினேன். அதன்மூலம் அவரது மனம் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

 பணியை பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டி கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.இதையடுத்து ஆளுநரின் மன்னிப்பை தான் ஏற்பதாகவும், ஆனால் தன்னை பாராட்டுவதற்காக தட்டினேன் என்ற அவரது விளக்கத்தை ஏற்க முடியாது என்று லட்சுமி சுப்பிரமணியன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி செல்கிறார். தொடரும் சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு நடுவே ஆளுநர் டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதனிடையே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேராசிரியர் நிர்மலாதேவியின் ஆடியோ விவகாரம் குறித்து விளக்கமளிக்க டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Label