OUR CLIENTS
குழந்தைகள் மீதான வன்கொடுமைக்கு மரண தண்டனை அவரச சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
குழந்தைகள் மீதான வன்கொடுமைக்கு மரண தண்டனை அவரச சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் Posted on 22-Apr-2018 குழந்தைகள் மீதான வன்கொடுமைக்கு மரண தண்டனை  அவரச சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

புதுடெல்லி, ஏப்.22-
    
 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்குவதற்கான அவசர சட்டத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிரகடனம் செய்துள்ளார்.

காஷ்மீர் மாநில கத்துவா அப்குதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். அந்த சம்பவத்தை தொடர்ந்து வட மாநிலங்களில் பல பகுதிகளில் இது போன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது போன்று குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் செய்யும் ஆண்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதுக்கு எதிராகப் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதுதொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ”12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் ”போஸ்கோ” சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தது.

இதற்கிடையில், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, நேற்று காலை இந்தியா திரும்பினார். இந்தியா வந்தவுடன் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவையின் அவரசரக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்கு உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் ”போஸ்கோ” சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியவுடன், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட கத்துவா சிறுமிக்கு இரங்கல் அனுசரிக்கப்பட்டது. பின்னர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தியால் சட்டத்திருத்தம் செய்வது குறித்த மசோதா முன்மொழியப்பட்டது. அப்போது பேசிய மேனகா காந்தி,”சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” எனக் கூறினார்.

அவசரச்சட்டம் பிரகடனம்

பின்னர், இந்த சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இன்று இந்த அவரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்ததோடு அவசரச் சட்டத்தையும் ராம்நாத் கோவிந்த் இன்று பிரகடனம் செய்துள்ளார். இதையடுத்து, இந்த சட்டம் அமலுக்கு வருகிறது.

வரும் குளிர்கால கூட்டத்தொடரில் அவசரச் சட்டத்தை முறையான சட்டமாக்க மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும். உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின்னர் மசோதா வாக்கெடுப்பிற்கு விடப்படும். மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பின்னர் இது நிரந்தர சட்டமாக அங்கீகரிக்கப்படும்.

மேலும் இந்த அவசர சட்டத்தின்மூலம், இது போன்ற பாலியல் வன்கொடுமை வழக்குகள் உடனடியாக விசாரணை செய்ய முடியும், தணடனையும் வழங்கலாம். அதற்கான கால அவகாசம் 2 மாதங்களாகும். அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து வழக்குகளும் முடிக்கப்படவேண்டும். மேலும், மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் அந்த வழக்குக்கு கூடுதலாக 6 மாத கால அவகாசம் மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Label