OUR CLIENTS
தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு
தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு Posted on 24-Apr-2018 தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு

புதுடெல்லி, ஏப். 24-

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவர சமர்ப்பித்த நோட்டீஸை மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடு   நிராகரித்தார். 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மாநிலங்களவை தலைவரான துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிடம் நோட்டீஸ் அளித்திருந்தனர். மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ள 7 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 64 எம்பிக்கள் அதில் கையெழுத்திட்டிருந்தனர்.

இதுகுறித்து வெங்கையா நாயுடு சட்ட வல்லுநர்கள், முன்னாள் தலைமை நீதிபதிகள், நீதிபதிகள் என பலருடன் நேற்று  முன்தினம் ஆலோசனை நடத்தினார். மக்களவை முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப்பையும் தொடர்பு கொண்டு பேசினார். அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணு கோபாலுடன் ஆலோசித்தார். சட்ட அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பி.கே. மல்கோத்ரா, சட்டசபை முன்னாள் செயலாளர் சஞ்சய் சிங் ஆகியோருடனும் கலந்துரையாடினார். மாநிலங்களவை செயலகத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த தீவிர ஆலோச னைகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை மாநிலங்களவை தலைவரான துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு நேற்று நிராகரித்துள்ளார்.

     இதுதொடர்பாக மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,“சட்டவல்லுநர்களிடம் இந்த விஷயம் குறித்து தனிப்பட்ட முறையில் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டேன். தலைமை நீதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சுமத்தியுள்ள 5 குற்றச்சாட்டுகளை கருத்தில் வைத்துள்ளேன். அத்துடன் இணைக்கப்பட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்தேன். இதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் நடத்தையில், அவரை குற்றவாளியாக கருதக்கூடிய எந்தவொரு ஆதாரமும் இல்லை. ஆகையால் இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு நான் ஒரு முடிவு எடுத்துள்ளேன். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிராகரித்துள்ளேன். இந்த தீர்மானத்திற்கு அனுமதி வழங்க முடியாது” என்று நிராகரித்துள்ளார்.மேலும், “இது கவனமான ஆலோசனைக்குப் பிறகே முடிவு செய்யப்பட்டது. நமது எண்ணம், சொல் மற்றும் செயல் ஆகியவற்றால் ஆட்சியின் 4 தூண்களில் ஏதேனும் ஒன்றைகூட நாங்கள் பாதிப்படைய விடமாட்டோம்” என்று கூறியுள்ளார்.அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.  ‘‘வெங்கையா நாயுடு மிகவும் அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்துவிட்டார். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல’’ என முன்னாள் மக்களவை தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்   ‘‘வெங்கையா நாயுடுவின் உத்தரவு இந்திய தேசத்தின் சட்ட கட்டமைப்பை சீர்குலைத்து விட்டது. அவரது உத்தரவு சட்டவிரோதமாக, அவசரமாக எடுக்கப்பட்ட முடிவாகும். இதில் இருந்து தீபக் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டை விசாரிக்க மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது’’இந்திய வரலாற்றிலேயே எம்.பிக்கள் அளித்த நோட்டீஸ் ஆரம்ப கட்டத்திலேயே நிராகரிக்கப்படுவது இதுவே முதல்முறை. வெங்கையா நாயுடுவின் உத்தரவு சட்ட அமைப்பின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை அழித்துவிட்டது. வெங்கையா நாயுடுவின் இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்’’ என கபில் சிபல் தெரிவித்தார்.    மேலும் தீபக் மிஸ்ரா பதவி விலகும் வரை உச்சநீதிமன்றத்தில் தீபக் மிஸ்ரா  தலைமையிலான அமர்வு முன்பு ஆஜராக மாட்டேன்  என்றும் கபில் சிபல் தெரிவித்தார். எதிர்கட்சிகளின் நோட்டீஸை வெங்கையா நாயுடு நிராகரித்தது சரியான முடிவுதான், எதிர்கட்சிகளின் நோக்கம் தீபக் மிஸ்ராவை பதவி விலக்குவது அல்ல.

உச்சநீதிமன்றத்தின் பெயரை கெடுப்பது தான்   என பிரபல வழக்கறிஞர் எப்.எஸ். நரிமான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.எதிர்கட்சிகளின் நோட்டீஸை துணை குடியரசு தலைவர் நிராகரித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அது வெற்றிபெற வாய்ப்பில்லை என முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோராப்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

Label