OUR CLIENTS
திவாகரனுக்கு எதிராக தினகரன் தரப்பினரின் கொந்தளிப்பு
திவாகரனுக்கு எதிராக தினகரன் தரப்பினரின் கொந்தளிப்பு Posted on 24-Apr-2018 திவாகரனுக்கு எதிராக தினகரன் தரப்பினரின் கொந்தளிப்பு

சென்னை, ஏப்.24-

திவாகரனுக்கு எதிராக தினகரன் தரப்பினரின் கொந்தளிப்பு, மன்னார்குடி வட்டாரத்தைக் கதிகலக்கி வருகிறது. ' இனியும் இவர்களது தலையீட்டை அனுமதிக்க முடியாது' என பேஸ்புக் பக்கத்தில் வெற்றிவேலைக் கருத்துப் பதிவிட வைத்தார் தினகரன்.

' சசிகலா பெயரை இருட்டடிப்பு செய்கிறார் தினகரன். அதன்விளைவாகத்தான் மோதல் வெடித்தது' என்கின்றனர் திவாகரன் தரப்பினர்.  நடராஜன் மறைவுக்குப் பிறகு, மன்னார்குடி குடும்பங்களுக்குள் நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்த குடும்ப மோதல்கள், இப்போது வீதிக்கு வரத் தொடங்கிவிட்டன. இரு தினம் முன்  ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார் ஜெய் ஆனந்த்.  அதில், 'மாபெரும் தவறுகளை பொறுத்து கொண்டு இருக்கிறோம். இந்தநிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும்' எனக் குறிப்பிட்டிருந்தார். தங்களை குறிவைத்துத்தான் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர் எனக் கருதிய தினகரன், உடனே வெற்றிவேலை அழைத்துப் பேசியிருக்கிறார். இதையடுத்து ஃபேஸ்புக்கில் வெற்றிவேல் ஒரு பதிவைப் போட்டார். 

இப்படி ஒரு பகிரங்கத் தாக்குதலை திவாகரன் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. திவாகரன் தரப்பினரிடம் பேசினோம். " தான் மட்டும் எம்.எல்.ஏவாக இருந்தால் போதும் என நினைக்கிறார் தினகரன். 18 பேரையும் அவர் தெருவில் நிறுத்திவிட்டார். அவர்களை ஆறுதல்படுத்தும் வேலையை திவாகரன் செய்து வருவது அவருக்குப் பிடிக்கவில்லை. தகுதிநீக்க எம்.எல்.ஏக்களில் பலரும் வழிச் செலவுக்குக்கூடப் பணம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். தன்னுடைய வலதுகரமாக செந்தில்பாலாஜியை வைத்திருக்கிறார் தினகரன். சசிகலா சிறையில் இருப்பது தனக்கு சாதகமானது என நினைக்கிறார். 

அதனால்தான், அமைப்பின் கூட்டங்களில் சசிகலா பெயரைப் பயன்படுத்துவதில்லை. கரூர் மாவட்டத்தில் நடந்த அம்மா அமைப்பின் கூட்டத்தில், சின்னம்மா படமே இடம் பெறவில்லை. அந்த நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட இரண்டாயிரம் டி சர்ட்டிலும் சின்னம்மா படம் இல்லை. திருச்சியில் நடந்த கூட்டத்திலும் இதே நிலைதான். இதைப் பற்றியெல்லாம் கேள்வி எழுப்பினால், தினகரனுக்குக் கோபம் வருகிறது. 'இனி குடும்ப ஆட்களை அண்டவிட மாட்டேன். இது என்னுடைய கட்சி' என ஆவேசப்படுகிறார். 

சின்னம்மா இல்லாவிட்டால், தினகரனால் அரசியலுக்குள் வந்திருக்க முடியுமா? திட்டம் போட்டு சசிகலாவை ஓரம்கட்டுகிறார். அவரிடம் தவறான தகவல்களைத் தெரிவிக்கிறார். இதற்காகவே பெங்களூரு சிறைக்குத் தகவல்களைத் தெரிவிக்க சிலரை நியமித்திருக்கிறார்.

இவருடைய நோக்கத்தைப் புரிந்து கொண்டதால்தான், தங்க.தமிழ்ச்செல்வன் ஒதுங்கியிருக்கிறார். 'என்னுடைய ஆட்களை வளைக்கப் பார்க்கிறார். அமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்' என சசிகலா கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்" என விவரித்தவர்கள்,  "ஆர்.கே.நகரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டார் வெற்றிவேல். ' இதற்கு அவர்தான் காரணம். நான் வெளியிடச் சொல்லவில்லை' எனத் தப்பித்துக் கொண்டார் தினகரன். 

இந்த சம்பவத்துக்குப் பிறகு இரண்டு மாதங்கள் வெற்றிவேலிடம் பேசாமல் இருந்தார் தினகரன். அப்போது, இளவரசி குடும்பத்தினர் தினகரனோடு முரண்பட்டனர். ' அந்தப் பெண்ணை நான் அறைவேன்' என நடராஜன் பேசியதும் வைரலானது. இந்நிலையில் திவாகரனுக்கு எதிராக வெற்றிவேலை கொம்பு சீவிவிட்டிருக்கிறார். நாளை இதே விவகாரத்துக்காக வெற்றிவேலை பலிகடாவாக்கவும் தினகரன் தயங்க மாட்டார். இந்த உண்மையை தாமதமாகத்தான் வெற்றிவேல் புரிந்து கொள்வார். 

நேற்று அறிக்கையாக வெளியிடுவதாகத்தான் வெற்றிவேல் திட்டம் போட்டு வைத்திருந்தார். அவரிடம் பேசிய தினகரன் மனைவி அனுராதா, 'அறிக்கையாக வெளியிட்டால், பிரச்னை பெரிதாகும். உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் போடுங்கள்' எனக் கூறியிருக்கிறார். அதில் என்னென்ன விஷயங்கள் இடம் பெற வேண்டும் என்பதையும் டிக்டேட் செய்தார். அதன்படியே வெற்றிவேல் செயல்பட்டார். தினகரன் நடத்தும் கேலிக்கூத்துகளைப் பற்றி சசிகலா கவனத்துக்கு நாங்களும் கொண்டு சென்றிருக்கிறோம். சின்னம்மாவே முடிவெடுக்கட்டும்" என்றார் விரிவாக.

Label