OUR CLIENTS
திமுக எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது: சபாநாயகர் பிடிவாதம், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
திமுக எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது: சபாநாயகர் பிடிவாதம், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு Posted on 18-Aug-2016 திமுக எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது: சபாநாயகர் பிடிவாதம், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

சென்னை:
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நமக்கு நாமே பயணம் குறித்து மறைமுகமாக விமர்சித்ததால் பிரச்சனை ஏற்பட்டது. இந்த விமர்சனத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க மறுத்த சபாநாயகரைக் கண்டித்து தி.மு.க உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவர்களை அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்றும்படி சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால், அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அத்துடன் தி.மு.க. உறுப்பினர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபைக்கு வந்தனர். அவர்களை எதிர்க்கட்சி தலைவர் அறைக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இதனையடுத்து சட்டமன்ற வளாகத்தில் அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேசமயம் சட்டமன்றக் கூட்டம் தொடங்கியதும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி அவையில் இருந்த தி.மு.க. உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை சபாநாயகர் நிராகரித்தார். இதனைக் கண்டித்து தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் உறுப்பினர்களும் சபாநாயகரின் முடிவைக் கண்டித்ததுடன், சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போதும் சபாநாயகர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. இதனால், தி.மு.க, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Label