OUR CLIENTS
பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி ஏற்படும் - அமித்ஷா
பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி ஏற்படும் - அமித்ஷா Posted on 26-Apr-2018 பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி ஏற்படும் - அமித்ஷா

பெங்களூரு, ஏப்.26-

கடந்த தேர்தலை விட வரும் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம் என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பாரதிய ஜனதா அகில இந்திய தலைவர் அமித்ஷா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-கர்நாடக சட்டசபை தேர்தலில் நாங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். இங்கு கிடைக்கும் வெற்றி தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக எங்களுக்கு அமையும்.

கர்நாடக தேர்தல் முடிவு இழுபறியாக இருக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறுவது சரி அல்ல. இங்கு அரசு மீது கெட்ட பெயர் இருக்கிறது. அவர்கள் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் செய்யவில்லை.எனவே, பாரதிய ஜனதா ஆட்சி வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பிரதமர் மோடிக்கு கர்நாடக மக்களிடம் நல்ல செல்வாக்கு இருக்கிறது. எனவே, பாரதிய ஜனதா வெற்றி உறுதி.ஏற்கனவே இதேபோல் பல மாநிலங்களில் வந்த கருத்து கணிப்புகளை நாங்கள் பொய்யாக்கி காட்டி இருக்கிறோம். திரிபுரா, உத்தரகாண்ட், மணிப்பூர், குஜராத் போன்றவற்றிலும் இதுபோன்ற கருத்து கணிப்புகள் வந்தன.

ஆனால், நாங்கள் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தோம். அதே போன்ற நிலை கர்நாடகாவில் ஏற்படும்.கர்நாடகாவில் காங்கிரஸ் ஜாதி அரசியலை முன் வைத்து செயல்படுகிறது. எங்கள் கட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் முதல்-அமைச்சரோ, எம்.எல்.ஏ.க்களோ யாரும் ஜாதி பார்த்து செயல்படுவதில்லை.
உத்தரபிரதேசத்தில் முலாயம்சிங் ஆட்சிக்கு வந்த போது யாதவ சமுதாயத்துக்கு மட்டும்தான் பாடுபட்டார். அதேபோல் மாயாவதி ஆட்சிக்கு வந்த போதும் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு சாதகமாக மட்டுமே செயல்பட்டார்.ஆனால், நாங்கள் ஆட்சியில் உள்ள அனைத்து இன மக்களையும் ஒருங்கிணைத்து அவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறோம்.

கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோர் சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன் படுத்தி தப்பி விடுவதால் தான் இனி அதுபோன்று நடக்காமல் இருக்க குழந்தைகள் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அவசர சட்டத்தை கொண்டு வந்து இருக்கிறோம்.பாரதிய ஜனதா கூட்டணியில் சிவசேனா, தெலுங்குதேசம் போன்ற கட்சிகளுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் போல எல்லா காலத்திலும் நடந்துள்ளது.வாஜ்பாய் ஆட்சியில் இருந்த போது கூட இது போல் கூட்டணியில் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது கூட்டணியில் இருந்த மம்தா பானர்ஜி, ஜெயலலிதா ஆகியோருடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. சிவசேனாவுடன் கூட அப்போது பிரச்சினை எழுந்தது.எங்கள் கூட்டணியில் மட்டும் அல்ல. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் அதே போல் அவர்கள் கூட்டணியிலும் பிரச்சினைகள் இருந்தது.2014-ல் நாங்கள் எந்த மாதிரி கூட்டணி அமைத்து இருந்தோமோ அதை விட பெரிய கூட்டணியை 2019 தேர்தலில் ஏற்படுத்துவோம்.

இப்போது திரிபுரா, அசாம் மாநிலங்களில் கூட்டணி ஏற்படுத்தி இருக்கிறோம். உத்தரபிரதேசத்தில் 2 கட்சிகளும், மகாராஷ்டிராவில் 3 கட்சிகளும் எங்களுடன் இருக்கின்றன.பீகாரில் நிதிஷ்குமார் எங்களோடு இருக்கிறார். எனவே, கடந்த தேர்தலை விட மிகப்பெரிய கூட்டணி வரும் தேர்தலில் அமையும்.நாங்கள் இதுவரை வெல்லாத 219 தொகுதிகள் உள்ளன. ஆனால், 2019 தேர்தலில் அந்த தொகுதியில் பலவற்றில் நாங்கள் வெற்றி பெறுவோம்.வடகிழக்கு மாநிலங்களில் 18 தொகுதியில் நாங்கள் வெல்லக்கூடிய நிலையில் இருக்கிறோம். ஒடிசா, மேற்கு வங்காளத்தில் கடந்த தேர்தலில் நாங்கள் 3-வது இடத்தில் இருந்தோம். இப்போது அங்கு 2-வது இடத்துக்கு வந்திருக்கிறோம். அங்கும் பல தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.தெலுங்கானா மாநிலத்திலும் பல தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். நாங்கள் கட்சியை விரிவாக்கும் திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறோம். இதன் காரணமாகத்தான் இப்போது பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2014-ல் எங்களுக்கு கிடைத்த இடங்களை விட 2019 தேர்தலில் கூடுதல் இடங்கள் கிடைக்கும்.இடைத் தேர்தல் சிலவற்றில் நடந்த முடிவுகளை வைத்து பாராளுமன்ற தேர்தலில் எடை போட முடியாது. பிரதமராக நரேந்திர மோடி இருக்க வேண்டுமா? அல்லது வேறு ஒருவர் வர வேண்டுமா? என்பதுதான் அடுத்த தேர்தலில் உள்ள முக்கிய கேள்வி.

எதிர்க்கட்சியில் இதற்கு தகுதியான நபர் யார் என்பதை கூட சொல்ல முடியவில்லை. அவர்களே குழம்பி போய் இருக்கிறார்கள். மோடி ஆட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.நாடு பல்வேறு நிலையிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே, பிரதமர் மோடியைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Label