OUR CLIENTS
அமைச்சர்கள் மீதான புகார்கள் ஆதாரமற்றவை என்று ஆளுநர் சான்றிதழ் அளிப்பதா?
அமைச்சர்கள் மீதான புகார்கள் ஆதாரமற்றவை என்று ஆளுநர் சான்றிதழ் அளிப்பதா? Posted on 26-Apr-2018 அமைச்சர்கள் மீதான புகார்கள் ஆதாரமற்றவை என்று ஆளுநர் சான்றிதழ் அளிப்பதா?

சென்னை, ஏப். 26-

தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, ஆட்சி திருப்திகரமாக நடைபெறுகிறது, என்று ஆளுநர் ‘நற்சான்றிதழ்’ வழங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆங்கில நாளேடு ஒன்றுக்கு சிறப்புப்பேட்டி அளித்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் “எடப்பாடி பழனிசாமி அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, ஆட்சி திருப்திகரமாக நடைபெறுகிறது”, என்று ‘நற்சான்றிதழ்’ வழங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக அமைந்திருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசில், நாளும் பெருகி முடைநாற்றமடிக்கும் ஊழல்கள் மாநில மக்களிடமும், ஊடகங்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டவை என்பதுடன், வருமானவரித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களாலேயே ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டு, பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா விற்பனை செய்ய அனுமதித்ததில், எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், சென்னை மாநகரக் காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் குட்கா முதலாளிகளின் டைரி குறிப்பிலேயே இடம்பெற்றுள்ளது.

அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி வருமானவரி புலனாய்வுத்துறையினர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே தலைமைச் செயலாளர் வரை தகவல் தெரிவித்துள்ளதற்குக் கடித ஆதாரங்களே உள்ளன. அதுபோலவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரத்தில், முதலமைச்சர் தொடங்கி பல அமைச்சர்களும் சம்பந்தப்பட்டிருப்பதற்கான விவரக்குறிப்புகள், சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையின் போது சிக்கியுள்ளன.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் ரெய்டுகளுக்கு உள்ளாகி, ஆதாரங்களுடன் அம்பலப்பட்டு அவமானப்பட்டு நிற்பதை, ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களே முழுமையாக அறிவார்கள். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசின் ஊழல்களுக்கு ஆதாரம் இல்லை என ஆளுநர் பேட்டியளித்திருப்பது ஆச்சரியமானது மட்டுமல்ல, உள்நோக்கம் கொண்டதாகவும் இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் பெற்றுத் தருமாறு தி.மு.க.வும், தோழமைக் கட்சியினரும் ஆளுநரை நேரில் சென்று வலியுறுத்தினோம். ஆனால், தமிழகத்தின் ஆளுநராக அவர் பொறுப்பேற்றதிலிருந்து, தான் மத்திய அரசின் பிரதிநிதி மட்டுமே என்பதை மறந்து, மாநில அரசின் அதிகாரத்திற்கும், அமைச்சரவை கூட்டுப்பொறுப்புக்கும் சவால்விடும் வகையில், தன்னிச்சையாக பல ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரியில் பணியாற்றிய பெண் பேராசிரியர் ஒருவர், ஆளுநரைக் குறிப்பிட்டு மாணவிகளிடம் பேசிய ஆடியோ அம்பலமாகி உள்ளது. யாரும் கோரிக்கை வைக்காமலே ஆளுநர் தன்னிச்சையாக, அவசரமாக நியமித்த விசாரணைக்குழுவும், தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி. பிரிவும் மேற்கொண்டு வரும் விசாரணைகளை ஆதாரமாகக் கொண்டு புதிய செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி அரசுடன் சமரசம் செய்துகொண்டு, ஆட்சியாளர்களை மகிழ்வித்திடும் வகையில், ‘நற்சான்றிதழ்’ வழங்கி ஆளுநர் பன்வாரிலால் பேட்டி அளித்திருப்பதும், அந்தப் பேட்டியில், மே மாதம் வரை தன்னுடைய ஆய்வுப்பணியை ஒத்தி வைத்திருப்பதாக தெரிவித்திருப்பதும், பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றன.

ஆளுநர் மாளிகையில் தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகளும் ஏற்கனவே அளித்துள்ள புகார் மனுக்களை தூசு தட்டினாலே, 2011 முதல் இன்றுவரை அ.தி.மு.க. ஆட்சியில் நடந்துள்ள இமாலய ஊழல் கொள்ளைகளை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஆதாரங்களுடன் தெரிந்து கொள்ளலாம்.  மாநிலத்தில் நிதி மேலாண்மை படுமோசமாகி நிதி நெருக்கடி நிலையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது.
இவற்றையெல்லாம் கண்டும் காணாதவராக அவர் தெரிவித்திருக்கும் கருத்துகள், வேறு ஏதோவொரு எதிர்பார்ப்புடன் கூடிய அவரது தனிப்பட்ட உள்நோக்கத்தை வெளிக்காட்டுவதாகவே இருக்கிறது. மாண்புமிக்க பொறுப்பில் உள்ள கண்ணியமான ஆளுநரிடமிருந்து இத்தகைய ஒரு கருத்தை தி.மு.கழகமும், தமிழக மக்களும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு சவால்விடும் கருத்து. ஆளுநர் அதிசயமான, ஆரோக்கியமற்ற சில முன்மாதிரிகளை உருவாக்கி வருவதை தி.மு.கழகம் கண்டனத்துடன் பதிவு செய்திட விரும்புகிறது.” இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Label