OUR CLIENTS
ஆற்றில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு நீர் மாசடைந்து சுகாதார பாதிப்பு
ஆற்றில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு நீர் மாசடைந்து சுகாதார பாதிப்பு Posted on 26-Apr-2018 ஆற்றில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு நீர் மாசடைந்து சுகாதார பாதிப்பு

சென்னை, ஏப்.26-

அடையாறு ஆற்றில், நந்தம்பாக்கம் பகுதி தடுப்பணையில் இருந்து, 2 கி.மீ., தூரம், ஆகாயத் தாமரை வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் தாமரையின் தண்டு அழுகி மக்குவதால், நீர் மாசடைந்து சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம்,   ஆதனூரில் இருந்து, பட்டினம்பாக்கம் வரை, அடையாறு ஆறு, 42 கி.மீ., நீளம் கொண்டது. கோடையில் தண்ணீரை தேக்கி வைக்க, மணப்பாக்கம் பகுதியில், ஒரு தடுப்பணை இருந்தது. ஆற்றின் மேல், விமான நிலைய ஓடுபாதை அமைத்தபோது, அந்த தடுப்பணை அகற்றப்பட்டது. அதன்பின், 2004ல், நந்தம்பாக்கம் பகுதியில், 14 ஷட்டர்கள் கொண்ட தடுப்பணை கட்டப்பட்டது. அந்த பகுதி, 130 மீட்டர் அகலம் கொண்டது.    பருவமழையின்போது, அனைத்து ஷட்டர்களும் திறந்து இருக்கும்.

கோடையில், நிலத்தடி நீர் அதிகரிக்கும் வகையில், பிரதான ஷட்டர்கள் மூடப்பட்டு, தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.  தடுப்பணையில் இருந்து, ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய தரைப்பாலம் வரை, 2 கி.மீ., தூரம், 130 மீட்டர் அகலம், 5 அடி ஆழத்தில், 5 கோடி கனஅடி நீர் தேக்கி வைக்கப்படும்.
இதனால் மணப்பாக்கம்,  நந்தம்பாக்கம், துளசிங்கபுரம்   சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய வளாகத்தில், கோடையில் நிலத்தடி நீர் அதிகரித்து, தண்ணீர் பற்றாக்குறை ஒரளவு கட்டுக்குள் இருக்கும்.   தற்போது, 130 மீட்டர் அகலம், 2 கி.மீ., தூரத்தில், ஆகாய தாமரைவளர்ந்துள்ளது. 

நீரை ஆவியாக்கும் தன்மைகொண்ட இந்த தாமரையால், தேங்கி நிற்கும் நீரின் அளவு குறைந்து, கோடையை சம்மாளிக்க முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது.  மேலும், தாமரையின் தண்டு அழுகி மக்குவதால், நீர் மாசடைந்து சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. தேங்கி நிற்கும் நீர், மாசடையாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இதனால், ஆற்றில் வளர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்ற, பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து நடவடிக்கை எடுக்க   வேண்டும் என பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர். மாநகராட்சி அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Label