OUR CLIENTS
அதிமுக முறைகேடுகளை தடுத்த அதிகாரியை இடமாற்றம் செய்வதா? அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்
அதிமுக முறைகேடுகளை தடுத்த அதிகாரியை இடமாற்றம் செய்வதா? அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம் Posted on 26-Apr-2018 அதிமுக முறைகேடுகளை தடுத்த அதிகாரியை இடமாற்றம் செய்வதா? அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்

சென்னை, ஏப்.26-

கோயம்பேடு வணிக வளாகத்தில் அதிமுக முறைகேடுகளை தடுத்த முதன்மை நிர்வாக அலுவலர் இராஜேந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தின் சந்தை மேலாண்மைக்குழு முதன்மை நிர்வாக அதிகாரி இராஜேந்திரன் அப்பதவியில் அமர்த்தப்பட்ட சில மாதங்களில் காரணமே இல்லாமல் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நேர்மையாக செயல்படும்அதிகாரிகளை காரணமின்றி பழிவாங்குவது கண்டிக்கத்தக்கதாகும்.
சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தான் நிர்வகித்து வருகிறது. இதற்காக பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சந்தை மேலாண்மைக் குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்தக் குழுவின் முதன்மை நிர்வாக அதிகாரியாக மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான அதிகாரி ஒருவர் இருப்பார். ஊழல் மூலம் பணம் கொழிக்கும் பதவி என்பதால் இப்பதவிக்கு கடுமையான போட்டி நிலவுவது வழக்கம். இந்தப் பதவிக்கு வருபவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு அனைத்து வகையான சட்டவிரோத செயல்களையும் அனுமதிப்பது வழக்கம்.

கோயம்பேடு வணிக வளாகத்தில் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அதிகாரிகள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் நாள்தோறும் சந்தை வளாகத்தில் வலம் வந்த இராஜேந்திரன், வணிகர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் நிறைவேற்றினார். கடைகளை உள்வாடகைக்கு விடுதல், கந்து வட்டிக்கு பணம் கொடுத்தல், செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடை செய்தார். அதேநேரத்தில் வணிகர்களின் நலனுக்காக சட்டப்பூர்வமாக பல்வேறு உதவிகளை செய்யும் நோக்கத்துடன் புதிய திட்டங்களை அதிகாரி இராஜேந்திரன் செயல்படுத்தினார்.

வணிக வளாகத்தில் மாலை நேரத்தில் கஞ்சா வணிகம், சட்டவிரோத மது விற்பனை ஆகியவையும், அவற்றைத் தாண்டிய சில செயல்களும் நடைபெற்று வந்த நிலையில், காவல்துறை ஒத்துழைப்புடன் அவற்றுக்கு முடிவு கட்டினார். அவரது செயல்களுக்கு வணிகர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.  ஆனால், இராஜேந்திரனின் அதிரடியாக செயல்பாடுகளால் ஆளுங்கட்சியின் ஆதரவுடன் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களின் வருமானம் முற்றிலுமாக தடைபட்டது. தமிழக துணை முதலமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆளுங்கட்சியினர் முறையிட்டதன் இராஜேந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டு, அதே குழுவின் அலுவலகத்தில் முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். நேர்மையான அதிகாரியை முக்கியத்துவம் இல்லாத இடத்திற்கு இடமாற்றம் செய்வதை சகிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

Label