மன்னார்குடியில் அம்மா அணி என்ற பெயரில் அலுவலகத்தை திவாகரன் திறந்து வைத்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும், சசிகலா சகோதரர் திவாகரனுக்கும் இடையேயான பனிப்போர் வெளிவந்த நிலையில் மன்னார்குடியில் அம்மா அணி என்ற கட்சியின் அலுவலகத்தினை திவாகரன் இன்று திறந்து வைத்துள்ளார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அம்மா அணிக்கு விரைவில் மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். அணியில் இணைய யாருக்கும் அழைப்பு விடமாட்டேன். விருப்பம் உள்ளவர்கள் அணியில் இணைவார்கள். தினகரனால் இழுத்து மூடப்பட்ட அம்மா அணிக்கு புத்துயிர் தந்துள்ளேன். ஜெயலலிதா முதன்முதலில் கட்சி தொடங்கியபொழுது என்னுடைய ஆதரவாளர்களுக்கே பொறுப்புகளை தந்தார் என கூறினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் செயல்பட விருப்பம் இல்லாததால் அம்மா அணி அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.