OUR CLIENTS
பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பள்ளிகளை மூட நடவடிக்கை - தமிழக அரசு முடிவு
பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பள்ளிகளை மூட நடவடிக்கை - தமிழக அரசு முடிவு Posted on 30-Apr-2018 பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பள்ளிகளை மூட நடவடிக்கை - தமிழக அரசு முடிவு

சென்னை, ஏப்ரல் 30-

பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது.
மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதற்கேற்ப பள்ளிகளையும் அனைத்து வகை வசதிகளுடன் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அடுத்த கல்வியாண்டுக்கான திட்டங்களை செயல்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன. வருகிற ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பு அந்த பணிகளை முடிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் கடந்த 14-ந்தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பள்ளிகளில் அனைத்து விதிகளையும் சரியாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் 7 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.

அந்த குழுவில் சுகாதாரம், மின்சாரம், தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துணை அதிகாரிகள் இடம் பெற வேண்டும். அவர்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று விதிகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்.
விதிகளை சரியாக பின்பற்றாத பள்ளிகளை உடனே மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் அருகில் உள்ள வேறு ஒரு பள்ளியில் சேர்க்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Label