OUR CLIENTS
லா லிகா பட்டம் வெல்வதை உறுதி செய்த பார்சிலோனா
லா லிகா பட்டம் வெல்வதை உறுதி செய்த பார்சிலோனா Posted on 01-May-2018 லா லிகா பட்டம் வெல்வதை உறுதி செய்த பார்சிலோனா

விகோ

லா லிகா கால்பந்து தொடரில், டெபோர்டிவோ அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பார்சிலோனா அணி 25வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்தது.

ஸ்பெயினில் நடைபெற்று வரும் இத்தொடரில், மொத்தம் 20 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை லீக் சுற்றில் மோதி வருகின்றன. நடப்பு சீசனில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் முன்னிலை வகித்து வரும் பார்சிலோனா அணி, தனது 34வது லீக் ஆட்டத்தில் டெபோர்டிவோ ல கோருனா அணியை எதிர்கொண்டது. விகோ நகரின் ரியஸோர் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், 7வது நிமிடத்தில் கோட்டின்யோ மற்றும் 38வது நிமிடத்தில் கேப்டன் லியோனல் மெஸ்ஸி அபாரமாக கோல் அடிக்க பார்சிலோனா 2-0 என முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து, பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய டெபோர்டிவோ அணிக்கு பெரஸ் 40வது நிமிடத்திலும், கோலக் 64வது நிமிடத்திலும் கோல் அடிக்க 2-2 என சமநிலை ஏற்பட்டது. பரபரப்பான கடைசி கட்டத்தில் மெஸ்ஸி மேலும் 2 கோல்களை திணித்து (82வது மற்றும் 85வது நிமிடம்) ஹாட்ரிக் சாதனை புரிந்தார். ஆட்ட நேர முடிவில் பார்சிலோனா அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.

அந்த அணி 34 லீக் ஆட்டத்தில் 86 புள்ளிகள் பெற்று (26 வெற்றி, 8 டிரா) தொடர்ந்து முன்னிலை வகிப்பதுடன், நடப்பு சீசனில் சாம்பியன் பட்டம் வெல்வதையும் உறுதி செய்தது. பார்சிலோனா அணிக்கு இன்னும் 4 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில், 2வது இடத்தில் உள்ள அத்லெடிகோ மாட்ரிட் தனது கடைசி 3 லீக் ஆட்டத்தில் வென்றாலும் 84 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். மூன்றாவது இடத்தில் உள்ள ரியல் மாட்ரிட் அணி 4 போட்டியில் தொடர்ச்சியாக வென்றாலும் அதிகபட்சமாக 83 புள்ளிகள் மட்டுமே பெற முடியும் என்பதால், பார்சிலோனா அணி 25வது முறையாக லா லிகா கோப்பையை கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது. ரியல் மாட்ரிட் அணி 33 முறை லா லிகா கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Label