பெங்களூரில் ஜெயாநகர் தொகுதி தேர்தல் ரத்து - பி.என்.விஜயகுமார் உயிரிழப்பு Posted on 04-May-2018
பெங்களூரு
கர்நாடக மாநிலம் ஜெயாநகர் தொகுதியின் பாஜக வேட்பாளர் பி.என்.விஜயகுமார் மாரடைப்பால் இன்று காலை உயிரிழந்தார்.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் மே 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜெயநகர் தொகுதியில் பி.என்.விஜயகுமார் ஏற்கனவே 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றார். தற்போது தொடர்ந்து 3-வது முறையாக பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக ஓய்வு இல்லாமல் தீவிர பிரசாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு ஜெயநகர் 4-வது பிளாக்கில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது திடீர் என அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அதிகாலை 1 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி கேட்டு பா.ஜ.க. தலைவர்களும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பா.ஜ.க.வின் தீவிர விசுவாசியாக விஜயகுமார் இருந்து வந்தார். கட்சிக்காக அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். விஜயகுமார் மறைவை அடுத்து ஜெயநகர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.