OUR CLIENTS
ஜெயலலிதா நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழா
ஜெயலலிதா நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழா Posted on 08-May-2018 ஜெயலலிதா நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழா

சென்னை, மே 8-

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை - மெரினா கடற்கரையில் நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் நினைவு மண்டபம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

நினைவிடம் அமைப்பதற்கான வரைபடம் தயாரிக்கும் பணி முடிவடைந்தது. இதை தொடர்ந்து நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு சார்பில் டெண்டர் விடப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 15-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைக்க ரூ.50.80 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தில் நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. முதல்வர் கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார். விழாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். முன்னதாக காலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. இதில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சகள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன், வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நினைவிடம் மற்றும் அதனைச் சார்ந்த கட்டமைப்புகள் சுமார் 50,422 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. மேலும்,  நினைவிடத்தில், ஃபீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவுச் சின்னம், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை வசதி,  புல்வெளி மற்றும் நீர் தடாகங்கள், சுற்றுச்சுவர் ஆகியவை   அமைக்கப்படும்.  நினைவு மண்டப கட்டுமானப் பணிகளை  2018 நவம்பர் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் வருகிறது. அன்று நினைவு மண்டபத்தை    பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.   
சென்னை - போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வசித்து வந்த வேதா  இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. நினைவிடம் அமைப்பதற்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை அடுத்த ஆண்டு ஜனவரியில் முடித்து, ஜெயலலிதா பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதி திறந்து வைக்கப்படும்    என எதிர்பார்க்கப்படுகிறது.

Label