OUR CLIENTS
மோடியின் பிரசாரம் சரக்கு இல்லாத வெற்றுக் காற்றைப் போன்றது...!
மோடியின் பிரசாரம் சரக்கு இல்லாத வெற்றுக் காற்றைப் போன்றது...! Posted on 08-May-2018 மோடியின் பிரசாரம் சரக்கு இல்லாத வெற்றுக் காற்றைப் போன்றது...!

பெங்களூரு, மே 8-

கர்நாடகா தேர்தல் குறித்த பிரதமர் மோடியின் பிரசாரம் சரக்கு இல்லாத வெற்றுக் காற்றைப் போன்றது என முதல்வர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வருகிற 12-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் பாஜக, காங்கிரஸ், மதச்சாற்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பிரதமர் மோடி உட்பட பாஜகவின் மூத்த தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்நிலையில், தேர்தலுக்கான பிரதமர் மோடியின் பிரசாரம் சரக்கு இல்லாத வெற்றுக் காற்றினைப் போன்றது என்றும், தேவையில்லாத விசயங்களை பேசி, மோடி வாக்காளர்களை குழப்பி வருவதாகவும் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  மேலும் கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின் வெற்றிகள் குறித்து பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுடன் பேச தயார் என்றும் அப்போது பிரதமர் மோடியும் உடன் இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.  பாஜகவுக்கு ஏன் ஓட்டு போட வேண்டும் என 5 காரணங்களை எடியூரப்பா கூற வேண்டும் என பதிவிட்டிருந்த சித்தராமையா, பாஜகவிற்கு ஏன் வாக்களிக்க கூடாது என்ற 5 காரணங்களை பதிவிட்டுள்ளார். 

1. கர்நாடகாவில் கடந்த 2008-2013 வரையிலான பாஜகவின் ஊழல் நிறைந்த ஆட்சியில் முதல்வரும், 5 அமைச்சர்களும் ஊழல் புகாரில் கைதாகி, சிறை சென்றனர். 
2. கடந்த பாஜக ஆட்சியில் 5 வருடங்களுக்குள் 3 முதல்வர்கள் மாற்றப்பட்டனர். ஆபரேஷன் கமலா என்ற பெயரில் எம்.எல்.ஏக்களை வாங்கி ஓர் நிலையில்லாத ஆட்சி நடைபெற்றது. 
3. மக்களின் சுதந்திரத்தினை பாஜகவினர் மதித்ததில்லை. பாஜக தனது ஆட்சியில் உடை, உணவு போன்றவற்றில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதுடன், அனைத்திலும் மேலாக இந்தி திணிப்பில் ஈடுபட்டது. 
4. பாஜகவினர் நாட்டின் அமைதி குறித்து கவலை கொண்டது இல்லை. பாஜகவினர் ஆட்சிக்கு வந்தால், தெருக்களில் வன்முறை வெடிக்கும். 
5. குறிப்பாக பாஜக அளித்த வாக்குறுதியை ஒருபோதும் நிறைவேற்றியதே இல்லை. பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு இந்திய குடிமகன் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வரை போடப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர். பெண்களுக்கு எதிராகவும், விவசாயிகள், தலித்துகள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராகவும் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Label