OUR CLIENTS
5 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் கடத்தல்2 பேர் அதிரடி கைது
5 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் கடத்தல்2 பேர் அதிரடி கைது Posted on 08-May-2018 5 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் கடத்தல்2 பேர் அதிரடி கைது

வேலூர், மே 8-

பேரணாம்பட்டில் காரில் கடத்தி சென்றபோது 5 கோடி மதிப்புள்ள முருகர், வள்ளி, தெய்வானை ஐம்பொன் சிலைகளை ஐஜி பொன்மாணிக்வேல் தலைமையிலான தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் சிலை கடத்துவதாக ஐஜி பொன்மாணிக்கவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படையினர் மாறுவேடத்தில் பங்களா மேடு பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பங்களாமேடு வனத்துறை விடுதி அருகில் தமிழக பதிவெண் கொண்ட கார் ஒன்று அவ்வழியாக வந்தது. அந்த காரை நிறுத்தி சிலைகளை வாங்கும் நபர்களாக தனிப்படையினர் கடத்தல்காரர்களை அணுகினர். வந்திருப்பவர்கள் போலீசார் என அறிந்த கடத்தல்காரர்கள் பங்களாமேடு வனத்துறை விடுதி அருகில் காரை பூட்டிவிட்டு தப்பி ஓடினர்.

பின்னர், காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து பார்த்தபோது உள்ளே ஐம்பொன் சிலைகள் இருப்பது தெரியவந்தது. உடனே தப்பி ஓடியவர்களை துரத்தியதில் ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் அப்பகுதியில் உள்ள வீட்டின் கழிவறையில் மறைந்திருந்தபோது பொதுமக்கள் உதவியுடன் பிடித்தனர். மேலும் சிலர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட இருவரையும் கைது செய்து விசாரித்தனர். இதில் கைதானவர்களில் ஈஸ்வரன் (50) என்பவர் அரவட்லா கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், இவர் சுயேச்சையாக எம்பி தேர்தலில் போட்டியிட்டவர் என்பதும் தெரிந்தது. மற்றொருவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(38) என்று தெரியவந்தது. இவர்களிடமிருந்து 5 கோடி மதிப்புள்ள முருகர், வள்ளி, தெய்வானை ஐம்பொன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிலையை 5 கோடிக்கு பேரம் பேசி கடத்த முயன்றபோது தனிப்படையினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.  

இதுகுறித்து ஐஜி பொன்மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது: 

ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் அனைத்து கோயில்களிலும் சிலை திருட்டை தடுக்க மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிட்டிருந்தோம். கடந்த 10 மாதத்திற்கு முன்பு குடியாத்தம் சோழபுரம் பகுதியில் நடந்தது. அங்குள்ள விநாயகர் கோயிலில் சிலை திருடப்பட்ட 11 நாளில் கள்ளப்பாடி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 மாதத்தில் இது 2வது சம்பவம் ஆகும். அதேபோல் ஆம்பூர் பூமாலை கிராமத்தில் உள்ள கோயிலில் முருகர் சிலை காணாமல் போனதாக வழக்கு உள்ளது. இப்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஐம்பொன் சிலைகள் அந்த கோயிலுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆம்பூர் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். இச்சம்பவத்தில் சிறப்பாக பணியாற்றிய சிலைகடத்தல் இன்ஸ்பெக்டர் அறிவழகன், காவலர்கள் பாலாஜி, சதீஷ்குமார், பிரகாஷ், சரவணகுமார், நடராஜ், மகேஷ் ஆகியோருக்கு தலா 1000 ரொக்க பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Label