OUR CLIENTS
நேர்காணலுக்கு வரத் தவறினால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்
நேர்காணலுக்கு வரத் தவறினால் ஓய்வூதியம் நிறுத்தப்படும் Posted on 08-May-2018 நேர்காணலுக்கு வரத் தவறினால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்

திருவண்ணாமலை,மே 8-
 
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் 2018 ஜூன் மாதத்துக்குள் நேர்காணலுக்கு வரத் தவறினால், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:  திருவண்ணாமலை மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்களும், குடும்ப ஓய்வூதியர்களும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்துக்குள் கருவூலத்தில் நேரில் ஆஜராகி நேர்காணலைப் பதிவு செய்வது கட்டாயம்.

அதன்படி, நிகழாண்டு ஜூன் மாதத்துக்குள் அலுவலக வேலை நாள்களில் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் நேரில் ஆஜராக வேண்டும். ஜீவன் பிரமான் வாழ்வுச் சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் சம்மந்தப்பட்ட கருவூலங்களுக்குச் செல்லாமலேயே அரசு  இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணைப் பதிவு செய்து நேர்காணல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ஆதார் எண், வருமான வரி கணக்கு எண், குடும்ப அட்டை,  வங்கிச் சேமிப்பு கணக்கு எண் ஆகியவற்றை சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள் மேற்கண்ட ஆவணங்களின் நகல்களுடன் தங்களின் ஓய்வூதிய எண்ணை    குறிப்பிட்டு கருவூலத்தில் சமர்ப்பிக்கலாம்.
நேர்காணலுக்கு வரும்போது ஓய்வூதியப் புத்தகம் கொண்டு வருவது அவசியம். நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் ஓய்வூதியப் புத்தகம், ஆதார் எண், வருமான வரி கணக்கு எண், குடும்ப அட்டை, வங்கிச் சேமிப்புக் கணக்கு எண் ஆகியவற்றில் நகல்களுடன் வாழ்வுச் சான்றை உரிய படிவத்தில் ஓய்வூதியம் வழங்கும் கருவூலத்துக்கு அனுப்பி வைக்கலாம்.

வாழ்வுச்சான்றை  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வாழ்வுச் சான்று படிவத்தை ஓய்வூதிய வங்கிக் கணக்குள்ள வங்கியின் கிளை மேலாளர், அரசிதழ் பதிவு பெற்ற மாநில, மத்திய அரசு அலுவலர், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரில் ஒருவரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.
அனைத்து நகல்களிலும் ஓய்வூதியர்கள் தங்களது ஒய்வூதிய கொடுவை எண்ணை   குறிப்பிட்டு ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாட்டில் உள்ள ஓய்வூதியர்கள் மாஜிஸ்திரேட், நோட்டரி பப்ளிக், வங்கி மேலாளர், இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வுச் சான்று பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
குடும்ப ஒய்வூதியர்கள் (நேரில் வருபவர்கள், நேரில் வர இயலாதவர்கள்) மறுமணம் புரியவில்லை என்பதற்கான உறுதிமொழியை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியர்கள் தற்போதைய இருப்பிட 
முகவரி, செல்லிடப் பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும்.
2018 ஜூன் மாதத்துக்குள் ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு வரத் தவறினாலோ அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட வாழ்வுச் சான்றை அனுப்பத் தவறினாலோ ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் ஆகஸ்ட் 2018 முதல் நிறுத்தம் செய்யப்படும். 
இதுவரை புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பம் அளிக்காத ஓய்வூதியர்கள், கருவூலத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மின்வாரியம், ரயில்வே, அஞ்சல் துறை, தொழிலாளர் வைப்பு நிதித் திட்டம், மத்திய அரசு ஓய்வூதியர்கள், உள்ளாட்சி மன்ற ஓய்வூதியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label