OUR CLIENTS
ஆளுநர் பதவி தேவைதானா? சமூக ஆர்வலர்கள் திடீர் கேள்வி?
ஆளுநர் பதவி தேவைதானா? சமூக ஆர்வலர்கள் திடீர் கேள்வி? Posted on 08-May-2018 ஆளுநர் பதவி தேவைதானா?  சமூக ஆர்வலர்கள் திடீர் கேள்வி?

வேலூர், மே 8-

ஆளுநர் பதவி உருவாக்கமும் அது உருவாகி வந்த பாதையும் எளிதாக நடந்துவிடவில்லை. சுதந்திரம் பெறுவதற்கு இந்தியா, தயாரானதும் அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்துக்காக அரசியல் நிர்ணயசபையால் அமைக்கப்பட்ட அரசியல் சட்டக்குழுவானது விவாதித்த முதல்அம்சமே ஆளுநரை எப்படி நியமிக்கலாம் என்பதைப் பற்றியதுதான். இதுகுறித்து இந்தக்குழு பல முறை கூடி விவாதித்தபோதும் முடிவுக்கு வரமுடியவில்லை. பின்னர் 1947-ஆம் ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சிறப்புத் தேர்தல் குழு மூலம் ஆளுநரை அந்ததந்த மாநில அரசு நியமிக்க வேண்டும் என முடிவானது.

 இந்த அரசியல் சட்ட வரைவானது அரசியல் நிர்ணய சபைத் தலைவரிடம் வழங்கப்பட்டது. அப்போதும், இது சரியாக இருக்குமா என யோசனை எழுந்ததையடுத்து, ஆளுநர் தேர்வு குறித்து மீண்டும் விவாதம் நடந்தது. இதையடுத்து மாநில சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் 4 பேர் கொண்ட குழுவிலிருந்து ஒருவரை ஆளுநராக குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. மேலும் மாநில மக்களே நேரடியான தேர்தல் மூலம் ஆளுநரை தேர்ந்தெடுக்கலாம் என்ற யோசனையும் தெரிவிக்கப்பட்டது.

 “இதில் எந்த முறையில் வேண்டுமானாலும் ஆளுநரை நியமித்துக் கொள்ளுங்கள், ஆனால் மூன்றில் இரு பங்கு சட்ட மன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதன் மூலம் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய முடியும்‘ என்று வரைவுச் சட்டம் கூறியது. இதனைப் பரிசீலிக்க சிறப்புக் குழு ஒன்றினை அரசியல் நிர்ணய சபைத் தலைவர் நியமித்தார். இந்தச் சிறப்புக் குழுவானது, ஆளுநரை குடியரசுத் தலைவர் நேரடியாக நியமிக்கலாம் என்று 1948-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதியன்று கூறியது. இப்படி நீண்ட விவாதம் - இழுத்தடிப்புக்குப் பிறகுதான் ஆளுநரை தேர்வு செய்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

 1949-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட பிரதமர் நேரு பேசம்போது, “மாநில அரசு ஒப்புக்கொள்ளக் கூடிய பொதுவானவரை ஆளுநராக நியமிப்பது நல்லது. அரசியலில் நேரடியாகப் பங்கு கொள்ளாத, வெளி மாநிலத்தைச் சேர்ந்த திறமைசாலியை ஆளுநராக நியமிப்பது மிகச் சிறந்தது. கல்வித்துறை அல்லது வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டால், அவர்கள் அரசுடன் முழுமையாக ஒத்துழைத்து அரசின் கொள்கைத் திட்டங்களைச் செயல்படுத்த எல்லா வகையிலும் உதவிபுரிவதுடன் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருப்பார்கள்’ என்று கூறினார்.

 ஆளுநரை குடியரசுத் தலைவர் நியமிக்கும் முன்பு, மாநில முதலமைச்சரின் ஒப்புதலைப் பெறுவது தேவையானது என்ற நேருவின் கருத்தை டி.டி. கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் ஆகியோரும் வலியுறுத்திப் பேசினார்.

 ஆனால் பின்னர் அதெல்லாம் பேச்சோடு போச்சு. மத்தியில் ஆளும் அரசுக்கே ஆளுநரை நியமிக்கும் சர்வ வல்லமை வந்து சேர்ந்தது. சொந்த மாநிலத்தை சேர்ந்தவருக்கு ஆளுநர் பதவி கொடுக்கக் கூடாது என்பது மரபாகக் கருதப்பட்டாலும் அதுவும் ஒரு கட்டத்தில் மீறப்பட்டது.

 சரோஜினி நாயுடுவின் மகள் மேற்கு வங்கத்தைச் சோந்தவர். அவர் அந்த மாநிலத்தின் ஆளுநர் ஆனார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சர்தார் உஜ்ஜல்சிங் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். சென்னை மாகாணம், மும்பை மாகாணம், அசாம் ஆளுநராக பணியாற்றியவர் பிரகாசா. இவர் எழுதிய “இந்தியாவின் ஆளுநர்கள்’ என்ற நூலில், “ஆளுநராக இருந்து கொண்டே சிலர் கட்சிப் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்; இவ்வாறு தீவிரமாக இருந்தவர்களை ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அழைத்து அறிவுறுத்தியது எனக்குத் தெரியும்‘ என குறிப்பிட்டிருக்கிறார்.

 கர்நாடக மாநில முதலைமைச்சராக இருந்த இராமகிருஷ்ண ஹெக்டே, ஆளுநரின் பணி என்ன, பங்கு என்ன என்பது குறித்து 1983-ஆம் ஆண்டு செப்டம்பரில் அளித்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது: அரசியல் சட்டத்தை வகுத்த அறிஞர்களின் நோக்கத்தை, அரசியல் சட்டத்தின் ஆதார தத்துவத்தை, இவர்கள் (ஆளுநர்கள்) மீறியிருக்கிறார்கள். முதல்வர் நியமனம், சட்ட சபை கலைப்பு போன்றவைகளில் நாடாளுமன்ற மரபுகளை ஆளுநர்கள் கடைப்பிடிக்கவில்லை. அல்லது கடைப்பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் இந்திய அரசாங்கத்தின் தலைவர்களின் கட்டளைகளுக்கு ஏற்ப நடந்துள்ளனர். இத்தகைய நடிவடிக்கைகளின் விளைவாக கூட்டாட்சித் தத்துவத்திற்கும் ஜனநாயக நெறிகளுக்கும் பெரும் ஊறு விளைவிக்கப்பட்டிருக்கிறது. மாநில சுயாட்சி மீறப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

 ஆளுநர் பதவி தேவையற்ற ஒன்று, அது முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்று ஜோதி பாசு தலைமையிலான மேற்கு வங்க அரசு கூறியது. அது சாத்தியமில்லையென்றால், மாநில சட்டப் பேரவைத் தருகின்ற பட்டியலிலிருந்து அனைத்து மாநிலங்களின் பேரவை இன்டர் ஸ்டேட் கவுன்சில் ஆலோசனையுடன் ஆளுநரை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

 முதல்வர்களாக இருந்த அண்ணா, எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். உள்ளிட்டத் தலைவர்கள், ஆளுநர் பதவி தேவையில்லாதது என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள்.

 ஆனால் அசாதாரண சூழலில் ஆளுநர் அவசியம் என்பதனை மறுப்பதற்கில்லை. ஆளுநர் பதவி வேண்டாம் என்று சொல்லும் மனநிலை எந்த மத்திய அரசுக்கும் வராது. காரணம், மாநிலத்தில் ஆளும் மாற்றுக் கட்சி ஆட்சியை அதட்டி உருட்டி கண்காணிக்க ஒரு நபர் வேண்டுமே?.

Label