OUR CLIENTS
கும்பகோணம் பள்ளி தீ விபத்து இழப்பீட்டுத் தொகையை மோசடி செய்த வழக்குரைஞர் வீட்டில் அதிரடி சோதனை!
கும்பகோணம் பள்ளி தீ விபத்து இழப்பீட்டுத் தொகையை மோசடி செய்த வழக்குரைஞர் வீட்டில் அதிரடி சோதனை! Posted on 08-May-2018 கும்பகோணம் பள்ளி தீ விபத்து  இழப்பீட்டுத் தொகையை மோசடி செய்த  வழக்குரைஞர் வீட்டில் அதிரடி சோதனை!

தஞ்சாவூர், மே 8-

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையில் முறைகேடு செய்த வழக்குரைஞர் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

குடந்தையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் 2004-இல் நேரிட்ட தீவிபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். 18 குழந்தைகள் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தின் பரிந்துரைப்படி,  உயிரிழந்த, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 5 லட்சம் முதல் இழப்பீடாக வழங்க அரசு உத்தரவிட்டது. இந்நிலையில்,  கும்பகோணம் சத்திரம் கருப்பூர் பிரதான சாலையில் வசிக்கும் ராமச்சந்திரன் மகள் திவ்யா (22) தஞ்சாவூர் சிபிசிஐடி டிஎஸ்பி பி.எம். தங்கவேலிடம் அளித்த புகார் மனு விவரம்: கடந்த 2004 ஆம் ஆண்டு கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி தீ விபத்தில் படுகாயமடைந்து உயிர் தப்பியவர்களில் நானும் ஒருவர்.  என்னைப் போல தீக்காயம் அடைந்தவர்களுக்கும், இறந்தவர்களின் குடும்பத்தாருக்கும் சரியான இழப்பீடு கிடைக்க நாங்கள் முயற்சித்த நேரத்தில், சென்னை கிழக்கு தாம்பரம் கணபதிபுரத்தில் வசிக்கும் வழக்குரைஞர் தமிழரசன் அறிமுகமானார். அவர் மூலம் தகுந்த இழப்பீட்டு தொகை பெறுவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். வழக்கு செலவுக்காக பாதிக்கப்பட்ட பெற்றோர்களிடமிருந்து ரூ.3.50 லட்சத்தை தமிழரசன் பெற்று கொண்டார். 

இதனிடையே,  உயிரிழந்த 94 குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம், படுகாயமடைந்த குழந்தைகளில் 3 பேருக்கு தலா ரூ.6 லட்சம், என்னை போன்ற 3 பேருக்கு தலா ரூ.5 லட்சத்தையும் 12 ஆண்டுகளுக்கு வட்டி கணக்கிட்டு வழங்க அரசு உத்தரவிட்டது.  அதன்படி, எங்களது வங்கி கணக்குகளில் இழப்பீட்டுத் தொகை வரவானது. இதனிடையே வழக்குரைஞர் தமிழரசன் என்னிடம் பெற்றிருந்த கையெழுத்துடன் கூடிய 2 வெற்று காசோலைகள், வெற்று காகிதங்களை வைத்து, எனது வங்கி கணக்கிலிருந்து ரூ.2.30 லட்சத்தை மோசடியாக ஏமாற்றி அபகரித்து கொண்டார். இது தொடர்பாக செல்லிடப்பேசிக்கு வங்கியில் இருந்து தகவல் வந்தது. இதே போல, பாதிக்கப்பட்ட 100 பேரிடமும் தலா ரூ.2.30 லட்சம் வீதம் ரூ.2.30 கோடி பணத்தை அனைவரின் வங்கி கணக்குகளிலிருந்தும் மோசடியாக, அவரது வங்கி கணக்கிற்கு மாற்றி கொண்டார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீவிபத்து இழப்பீடு தொடர்பான வழக்கில் வாதாடிய வழக்குரைஞர் தமிழரசன் என்பவர்,  இழப்பீட்டுத் தொகையில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் ஏப்ரல் 27ஆம் தேதி உத்தரவிட்டது.இதையடுத்து சிபிசிஐடி போலீஸார், வழக்குரைஞர் தமிழரசன் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 409, 420 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள தமிழரசன் வீட்டுக்கு வந்த சிபிசிஐடி காவல்துறையினர், பக்கத்து வீட்டில் இருந்த வீட்டுச் சாவியை வாங்கி, வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.தங்களுக்குக் கிடைத்த இழப்பீட்டுத் தொகையை முறைகேடாக வழக்குரைஞர் தமிழரசன் தனது வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொண்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் 49 பேர் வழக்குப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Label