OUR CLIENTS
தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடும் மோடி
தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடும் மோடி Posted on 09-May-2018 தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடும் மோடி

பெங்களூரு, மே 9-

பிரதமர் மோடி,  தரம் தாழ்ந்த வார்த்தைகளால் தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடுவதாக மன்மோகன்சிங் குற்றம் சாட்டினார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக  பெங்களூரு வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டில் வங்கி மோசடி தொகை கடந்த 2013-ம் ஆண்டு ரூ.28 ஆயிரத்து 416 கோடியாக இருந்தது. இது தற்போது அதாவது பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வங்கி மோசடி 4 மடங்கு அதிகரித்துவிட்டது.  கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரூ.1.11 லட்சம் கோடி அளவுக்கு வங்கிகளில் மோசடி நடைபெற்று உள்ளது. வங்கி மோசடியில் குற்றம் செய்பவர்கள் தண்டனையில் இருந்து தப்பிவிடுகிறார்கள். 2015 மற்றும் 2016-ம் ஆண்டிலேயே, ஏதோ தவறு நடக்கப்போவது தெரிந்தது. ஆனால், மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை.

டாவோஸ் நகரில், நீரவ் மோடியுடன்தான், பிரதமர் மோடி இருந்தார்.  அடுத்த சில நாட்களில், நீரவ் மோடி தப்பி ஓடிவிட்டார்.  பிரதமர் மோடி அரசின் பொருளாதார நிர்வாகம் தவறானது. அதனால், வங்கிகள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது.
பண மதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் அவசரகதியில் செயல்படுத்தப்பட்ட சரக்கு-சேவை வரி திட்டம் ஆகியவை மோடி அரசின் மிகப்பெரிய தவறான முடிவுகள் ஆகும்.  இந்த தவறுகளால் தான் பொருளாதார வளர்ச்சியில் நமக்கு இழப்பு ஏற்பட்டது. மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறிபோய்விட்டன.

தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார். பொழுது விடிந்து பொழுது போனால், அரசியல் எதிரிகள் மீது தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடுகிறார். இது பிரதமர் பதவிக்கு அழகல்ல.  நாட்டுக்கும் நல்லதல்ல.  வேறு எந்த பிரதமரும், குறிப்பாக தேர்தல் நேரத்தில், இவ்வளவு மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியது இல்லை.  பிரதமர் பதவியின் கண்ணியத்தை காக்க வேண்டும். அவர் பாடம் கற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன்.
கர்நாடக மாநிலம் வளமான மாநிலங்களில் ஒன்று என்பதால், இந்த தேர்தலின் முடிவு, தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். கர்நாடகத்தில் காங்கிரசுக்கு மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பை தர வேண்டும்”. இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.

Label