OUR CLIENTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரியில் மிதந்து வரும் கிராமங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரியில் மிதந்து வரும் கிராமங்கள் Posted on 09-May-2018 திருவண்ணாமலை மாவட்டத்தில்  ஏரியில் மிதந்து வரும் கிராமங்கள்

வேலூர், மே 9-

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் ஏரி 14 கிராமங்களுக்கு காமதேனுவாய் விளங்கி வருகிறது.
 
கொங்கராம்பட்டு. கண்ணமங்கலம்,அம்மாபாளையம், அத்திமலைப்பட்டு, ஒண்ணுபுரம், புதுப்பாளையம், மேல்நகர், கீழ்நகர், பெரிய அய்யம்பாளையம், வண்ணாங்குளம், கொளத்தூர், அழகுசேனை, ஆண்டிபாளையம், காட்டுக்காநல்லூர் ஆகிய கிராமங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக கண்ணமங்கலம் ஏரி நிரம்பி வழிந்தால்தான் மற்ற ஏரிகளுக்கு விமோசனம். ஆனால் இன்று வரை கண்ணமங்கலம் ஏரியானது ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி திருமண மண்டபங்கள், அரிசி ஆலைகள், மாடிவீடுகள், வணிக வளாகங்கள் என கான்கிரீட் காடாக இருக்கிறது.

ஏரிமட்டுமல்ல, நீர்வரத்து கால்வாய்கள் கூட ஆக்கிரமிப்பாளர்களால் தூர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஏரியை மீட்க உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என வழக்கு தொடுத்து தனி ஆளாக போராடி இடிப்பு ஆணையும் வாங்கி வந்தார் விவசாயி கே.எம்.சாமிநாதன். நடவடிக்கை எடுக்காததால் ஜெயலலிதா சமாதியில் எண்ணெய் ஊற்றிக் கொளுத்தி கொள்வேன் என அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சமூக சேவை சங்கத்தலைவராகவும் இருக்கும் சாமிநாதன் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ஒரு விவசாயியின் வயிற்றில் அடிப்பது ஆயிரம் பேரின் வயிற்றில் அடிப்பதற்கு சமம். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நான் தட்டாத கதவுகளே இல்லை. அதாவது அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களோ இல்லை. ஆக்கிரமிப்புகளை இடிக்கச் சொல்லி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியது. அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த விஜய் பிங்க்ளே அரசு அதிகாரிகளை விட்டு இடிக்க வேண்டிய சர்வே எண் 234 லிருந்து 262 வரை அடையாளக் கற்களையும், சிவப்பு கொடியையும்நட்டு அடையாளப் படுத்தினார்.பொதுப்பணித்துறையும் இடித்து சிமெண்ட் கழிவுகளை ஊருக்கு அப்பால் கொட்டுவதற்கு 10 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கினார். ஆனால் அப்போது அமைச்சராக இருந்த முக்கூர் சுப்பிரமணியனை வைத்து ஓ.பி.எஸ்சை சந்தித்து ஆக்கிரமிப்பாளர்கள் காய் நகர்த்த இரோடு இரவாக ஆட்சியர் விஜய் பிங்க்ளே பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அடுத்து வந்த மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் அதே இரவில் அடையாள கற்களும், கொடிகளும் காணாமல் போயின. கடைசிவரை அந்த ஏரியை அவர் பார்க்கவேயில்லை. அடுத்துவந்த பிரசாந்த் மு.வடநேரே கண்ணமங்கலம் ஏரி கோப்பை தூசி தட்டி எடுத்து பார்த்தார்.
இந்த விஷயம் எப்படி தெரிந்ததோ திருவண்ணாமலையில் இருந்து கடலூருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அங்கிருந்து தற்போது கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இதில் என் வீட்டாருக்கும் எனக்கும் கூட இதில் பிரச்னை வந்தது.

இதில் என்னை எரியூட்டப்பார்த்தனர். எப்படியோ நான் தப்பினேன். கடலூரில் நடந்த நுகர்வோர் மாநாட்டில் நீதிபதிகள் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினர். என் சேவைக்கு இந்த ஒன்றே போதும். இப்போதுள்ள ஆட்சியர் கந்தசாமியிடமும் மனு கொடுத்துள்ளேன். பார்க்கலாம் என்று சொல்லியுள்ளார். இப்பொழுது ஆக்கிரமிப்பு இடத்தில் ஏரிக்கரையில் 35 லட்சம் ரூபாய் செலவில் ஆரணி தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் பேருந்து நிலையம் கட்டி வருகிறார். ஏரி நிரம்பினால் போதும் பேருந்து நிலையம் மூழ்கும். இதுகூட ஆக்கிரமிப்பாளர்களின் ஏற்பாடு. பேருந்து நிலையம் கட்டி விட்டால் எப்படியும் அரசு இடிக்காது என்கிற தைரியம் என்றார் ஆதங்கத்துடன்.
இதுகுறித்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறுகையில், மக்கள் வெயிலிலும், மழையிலும் சிரமப்படுகிறார்கள் என நிதியை ஒதுக்கி கட்டினால் குறை சொல்கிறவர்கள் சொல்லுவார்கள். பொதுவாழ்வில் இதைப்பற்றி கவலைப்பட்டால் முடியாது. 

இப்போது பேருந்து நிற்குமிடத்தில் கட்டியிருக்கிறோமே தவிர ஏரிக்குள் கட்டவில்லை. மற்ற பிரச்னைகள் எல்லாம் அனைத்து ஊர்களிலும் உள்ளதுதான் என்றார். ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிப்பது நீர்நிலைகளை காப்பாற்றுவது எப்படி நீதிமன்றத்தின் கடமையோ அதுபோல் இந்த நிலைக்கு ஆளாக்கிய அரசு அதிகாரிகளை தண்டிப்பதும் அரசின் கடமை. அரசு தனது கடமையை செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label