OUR CLIENTS
வெள்ளி மட்டும் தான் இலக்கு தோஷம் கழிப்பதாக ஏமாற்றி திருடி வந்த ‘பொன்விழா திருடர்’ கைது!
வெள்ளி மட்டும் தான் இலக்கு தோஷம் கழிப்பதாக ஏமாற்றி திருடி வந்த ‘பொன்விழா திருடர்’ கைது! Posted on 10-May-2018 வெள்ளி மட்டும் தான் இலக்கு தோஷம் கழிப்பதாக ஏமாற்றி திருடி வந்த ‘பொன்விழா திருடர்’ கைது!

சென்னை, மே 10-

 வீட்டில் தோஷம் இருக்கிறது, பூஜை செய்யவேண்டும் என பொதுமக்களை ஏமாற்றி வெள்ளிப்பொருட்களை மட்டுமே 50 ஆண்டுகளாக திருடிவந்த  80 வயது திருடர் சென்னையில் சிக்கினார்.

திருடர்களில் பலவகை உண்டு சுவாரஸ்யமான திருடர்களும் உண்டு. திருடிய நகைகளை வாங்கும் நபர்கள் ஏமாற்றி விடுகிறார்கள் என்று எடைமெஷின் வைத்து திருடிய நகைகளை எடைபோட்டு விற்ற நபர் உண்டு. 24 ஆண்டுகள் திருடாமல் திடீரென திருடி சிக்கிய முதியவரும் உண்டு. சில மாதங்களுக்கு முன் மயிலாப்பூரில் கைதான அந்த முதியவர் எத்தகைய பூட்டையும் சில நிமிடங்களில் திறந்துவிடுவார். வயதானாலும் தொழில் நேர்த்தியுடன் 10 நிமிடத்தில் திருடிய அவர் டெக்னாலஜி வளர்ச்சியான கண்காணிப்பு கேமராவில் சிக்கிக் கொண்டார்.

இப்படி வினோத திருடர்கள் வரிசையில் கடந்த 50 ஆண்டுகளாக திருடி வரும் பொன்விழா கண்ட 80 வயது முதியவர் சீனிவாசன்(எ) சில்வர் சீனிவாசன் என்பவர் 7ம் தேதி சென்னை சங்கர் நகரில் ஒரு வீட்டில் தோஷம் கழிப்பதாக கூறி கைவரிசை காட்டும் போது சிக்கினார். அவரை போலீஸார் விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த 50 ஆண்டுகளாக திருட்டுத்தொழிலில் இவர் ஈடுபட்டது தெரிய வந்தது. பார்ப்பதற்கு முதியவர், கௌரவமான தோற்றத்துடன் உலா வரும் சீனிவாசன், சிக்கியவுடன் சங்கர் நகர் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறிய தகவல் போலீஸாரை திடுக்கிட வைத்தது. 50 ஆண்டுகளாக 200 திருட்டுகளில் ஈடுபட்டவர் என்பதும், மவுண்ட், நங்கநல்லூர், பழவந்தாங்கல் பகுதியில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் இவர் பிரபலம்.
இது தவிர மயிலாப்பூர் பகுதியில் 7 வீடுகளில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. ஓய்வுப்பெற்ற பல போலீஸாரிடையே சில்வர் சீனிவாசன் என்றால் பிரபலம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. சீனிவாசன் கையில் ஒரு துணிப்பை வைத்திருந்தார். அதில் உள்ள ஒரு நோட்டுப்புத்தகத்தில் எங்கெங்கு திருடினேன் என்பதை எழுதி வைத்திருந்தார்.

80 வயது முதியவரான சில்வர் சீனிவாசனிடம் விசாரணை நடத்திய போலீஸாருக்கு அவர் சொன்ன கூடுதல் தகவல்கள் சுவாரஸ்யத்தை கிளப்பியது. ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், ஆரம்பத்தில் புரோகிதர்களுடன் சேர்ந்து ஊர் ஊராக யாகம், புரோகிதம் என்று சென்றுள்ளார். அதில் வருமானம் அதிகம் கிடைக்காததால் தனது 30வது வயதில் நூதன முறையில் திருட ஆரம்பித்தார்.

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சரளமாக பேசத்தெரிந்த இவர், 1968-ல் தனது தொழிலை ஆரம்பித்துள்ளார். ஐம்பதாண்டுகளாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ள அவர் இந்த ஆண்டு தனது திருட்டுத்தொழிலில் பொன் விழாவை எட்டியுள்ளார். கோவில் வாசலில் அமர்ந்திருந்து பக்தர்களை கண்காணிப்பது இவர் வழக்கம். முக்கியமாக மயிலாப்பூர் கோவில் தான் இவரது தலைமை அலுவலகம். கோவில் வாசலில் அமர்ந்திருப்பவர் பல பிரச்சனைகளில் தெய்வத்தை தேடி வரும் பக்தர்களிடம் பேச்சுக்கொடுப்பார். பின்னர் அவர்கள் பிரச்சனைகளை தெரிந்தவுடன் தனது வழக்கமான சாதூர்யமான பேச்சால் வலை விரிப்பார். உங்களுக்கு தோஷம் இருக்கிறது, அதை கழித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியவுடன் அவரை நம்பி வீட்டுக்கு பக்தர்கள் அழைத்துச்செல்வார்கள்.
வீட்டில் தோஷம் கழிக்கிறேன், யாகம், பூஜை செய்கிறேன் என கவனத்தை திசைத்திருப்பி அவர்கள் ஏமாந்திருக்கும் சமயம் வெள்ளிப்பொருட்களை மட்டும் திருடி தப்பித்து சென்று விடுவார். பொருளை பறிகொடுத்தவர்களும் அதை பெரிதாக எடுத்து போலீஸில் சொன்னால் தமக்குத்தான் அசிங்கம் என்று புகார் அளிக்காமல் விட்டுவிடுவார்கள்.
புகார் அளித்து சிக்கிய வழக்குகளில் வெள்ளிப்பொருட்கள் என்பதால் போலீஸார் பெரிதாக வழக்குப் பதியவில்லை. பல வழக்குகளில் சிக்கி சில நாட்களிலேயே வெளியே வரும் சீனிவாசன் மீண்டும் பழைய பாணியில் கோயில் வாசலில் அமர்ந்து பக்தர்களை பேசி அவர்கள் வீட்டுக்கு சென்று பூஜை புனஸ்காரம் என அவர்கள் கவனத்தை திசைத்திருப்பி வெள்ளிப்பொருட்களை மட்டும் திருடி சென்றுவிடுவார்.

இது போன்ற புகார்கள் மவுண்ட் துணை ஆணையர் அலுவலகம் உள்ள பகுதி, மயிலாப்பூர் பகுதிகளில் அதிகம் நடந்தது. வெள்ளிப்பொருட்களை திருடியதால் போலீஸார் ‘சில்வர் சீனிவாசன்’ என்று பெயரிட்டு விட்டனர். வெள்ளிபொருட்கள் திருட்டா? பிடி சில்வர் சீனிவாசனை என்று பல பத்தாண்டுகளுக்கு முன்பு வரை போலீஸார் மத்தியில் பிரபலமாக இருந்தவர் சில்வர் சீனிவாசன். சமீபகாலமாக எங்கு போனார் என்று தெரியாத நிலையில் மயிலாப்பூர் ஸ்டேஷன் எல்லைக்குள் இதே போன்று தோஷம் கழிப்பதாக கூறி வெள்ளி பொருட்களை திருடிச்சென்றதாக 7 புகார்கள் வந்தது. ஒரு சம்பவத்தில் தங்க நகையையும் சேர்த்து திருடிச் சென்றதாக புகாரின் பேரில் போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் சங்கர் நகரில் தோஷம் கழிக்கிறேன் என்று சென்ற சீனிவாசன் வீட்டில் உள்ளவர்கள் அசந்த நேரத்தில் பணத்தை திருடிக்கொண்டு நழுவினார்.
சங்கர் நகரில் வசிக்கும் ஒருவரை கோவிலில் பார்த்து அவரது குறையை கேட்ட சீனிவாசன் சரளமாக அவரது குறைகளை சொல்லி தோஷம் கழித்தால் எல்லாம் சரியாகும் என்று கூறியுள்ளார். அவர்களும் வீட்டுக்கு பூஜைக்கு அழைக்க வழக்கமாக வெள்ளிப்பொருட்களை பூஜையில் வைக்கச்சொல்லும் சீனிவாசன், வெள்ளிப்பொருட்கள் இல்லாததால் பணக்கட்டுகளை வைக்கச்சொல்லி இருக்கிறார்.

பூஜை நடத்தும்போதே உள்ளே தண்ணீர் எடுத்து வாருங்கள், வேறு சில பொருட்களை எடுத்து வாருங்கள் என்று கூறிய சீனிவாசன் பணக்கட்டுகளுடன் வெளியே வந்துள்ளார். அவர் சாலைக்கு வந்தவுடன் ஆட்டோ ஒன்றில் ஏற பேரம் பேசியுள்ளார். அதன் பின்னர் தப்பிச்செல்ல முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சங்கர் நகர் போலீஸார் விசாரணைக்கு பின் மயிலாப்பூர் போலீஸில் ஒப்படைக்க, மயிலாப்பூர் போலீஸார் நடத்திய விசாரணையை அடுத்து சீனிவாசனிடமிருந்து 20 சவரன் நகை 1 கிலோ வெள்ளியையும் கைப்பற்றினர். மேலும் சீர்காழியில் சில தங்க நகைகளை கைப்பற்ற தனிப்படை விரைந்துள்ளது. கைது செய்யப்பட்ட சீனிவாசன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Label