OUR CLIENTS
கிருஷ்ணா நதி கால்வாய் கரைகள் சேதம் சீரமைக்க கோரி பொதுமக்கள் வேண்டுகோள்!
கிருஷ்ணா நதி கால்வாய் கரைகள் சேதம் சீரமைக்க கோரி பொதுமக்கள் வேண்டுகோள்! Posted on 11-May-2018 கிருஷ்ணா நதி  கால்வாய் கரைகள் சேதம் சீரமைக்க கோரி பொதுமக்கள் வேண்டுகோள்!

பூவிருந்தவல்லி, மே 11-

ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா நதி கால்வாயில் சேதமடைந்த கரைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983-ல் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது. அதன்பேரில் ஆந்திர அரசு நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வருடந்தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் என 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

இதற்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு கிருஷ்ணா நதி கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோ மீட்டர் தூரமும், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரமும் அமைந்து உள்ளது.
1984-ல் கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கப்பட்டு, 1995-ல் முடிக்கப்பட்டது. 1996-ல் முதன் முதலில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இது வரை 40 முறை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இப்படி தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் கிருஷ்ணா நதி கால்வாய் கரைகள் சேதமடைந்து வருவது தொடர் கதையாக இருக்கிறது. கடைசியாக ஜனவரி 2-ந் தேதி முதல் மார்ச் 26-ந்தேதி வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 610 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது.

தண்ணீர் வேகமாக பாய்ந்து வந்ததால் ஊத்துக்கோட்டை அருகே உள்ள அம்பேத்கர்நகர், சிற்றபாக்கம், அனந்தேரி, போந்தவாக்கம், கெருகம்பாக்கம், தேவந்தவாக்கம் உள்பட பல பகுதிகளில் கிருஷ்ணா நதி கால்வாய் கரைகள் சேதமடைந்தன. இப்படி கரைகள் சேதமடையும்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிக நடவடிக்கை எடுத்து அதன் பிறகு அப்படியே விட்டு விடுகிறார்கள். கண்டலேறு அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டால் கரைகள் மேலும் சேதமடைந்து வருகின்றன.
இனி அப்படி கரைகள் சேதமடையாமல் இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும். தற்போது சேதம் அடைந்துள்ள கிருஷ்ணா நதி கால்வாய் கரைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Label