OUR CLIENTS
தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சி செய்யும் மத்திய அரசு
தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சி செய்யும் மத்திய அரசு Posted on 11-May-2018 தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சி செய்யும் மத்திய அரசு

காரைக்கால், மே 11-

ஒட்டு மொத்த தமிழகத்தை பாலைவனமாக மாற்ற பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகில் தெருமுனைப்பிரசார கூட்டம் நடைபெற்றது. புதுவை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:- காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து காலம் கடத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கர்நாடகா அரசியலை மையமாக கொண்டே பிரதமர் நரேந்திரமோடி, காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பேச மறுத்து வருகிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பேச வேண்டும் என பலர் பலமுறை தெரிவித்தும், பிரதமர் தொடர் மவுனம் காப்பது ஏன் என்பது தெரியவில்லை. பிரதமரின் மவுனம் ஒட்டு மொத்த தமிழக மக்களை அவமதிப்பதாகும். தமிழகம் மற்றும் புதுவை தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இந்நிலையில், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய பா.ஜ.க. அரசு வன்மம் கொண்டு செயல்படுகிறது. ஒட்டு மொத்த தமிழகத்தை பாலைவனமாக மாற்ற பா.ஜ.க. அரசு நினைக்கிறது.

மக்கள் பிரச்சனையில் அக்கறையில்லாத பிரதமர் நரேந்திர மோடி உலகத்தை சுற்றுவதிலேயே மும்முரமாக உள்ளார். மிச்சமுள்ள நாடுகளை மே மாதத்திற்குள் சுற்றி பார்த்து விடட்டும் இல்லை என்றால் அதன்பிறகு எந்த நாட்டையும் அவரால் பிரதமராக இருந்து சுற்றி பார்க்கமுடியாது. அதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள். 
டெல்லியை தொடர்ந்து, புதுவையிலும் கவர்னர் மூலம் மாநில முதல் அமைச்சர் நாராயணசாமிக்கு பிரச்சனைகளை கொடுப்பதில், பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது. புதுவையில் உள்ள கவர்னர் கிரண்பேடி இன்னும் போலீஸ்காரர் போலவே செயல்பட்டு வருகிறார். அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Label