OUR CLIENTS
குழந்தைகளை கடத்துவது தொடர்கிறதா?
குழந்தைகளை கடத்துவது தொடர்கிறதா? Posted on 11-May-2018 குழந்தைகளை கடத்துவது தொடர்கிறதா?

வேலூர், மே 11-

தமிழகத்தில் வேலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் குழந்தைகளை கடத்த வடமாநில இளைஞர்கள் வந்துள்ளதாக கூறி பொதுமக்கள் அவர்களை அடித்து கொலை செய்வது, துன்புறுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இப்போது காவல் துறை செய்வதறியாது திகைத்து நிற்கிறது. இதற்கு முழுக்க முழுக்க காரணமே காவல் துறைதான். குற்றவாளிகளை பிடித்து காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தால் அவர்களை ஹாயாக வெளியில் விட்டு விட்டு வேடிக்கை பார்த்து வந்த காவல் துறையால்தான் இப்பிரச்னைக்கு முழுமையான அடித்தளமாக உள்ளது. இரவு ரோந்து என்று முன்பொரு காலத்தில் அதாவது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. இது மன்னராட்சியில் இருந்தே தொன்று தொட்டு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் இரவு காவல் என்று உரக்க சொல்லிக் கொண்டே நகரில் வலம் வருவார்கள் காவலர்கள். இதே முறைதான் காவல் துறை தோன்றிய பிறகும் ராத்திரி பாரா என்றும், இரவு ரோந்து என்றும் இருந்து வந்தது. ஆனால் அது நாளடைவில் நிறுத்தப்பட்டு விட்டது. 

இதை தமிழக காவல் துறை தலைவர்தான் மீண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புழக்கத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் திருட்டு, கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க திருடர்கள், சந்தேக நபர்களை பொதுமக்கள் கஷ்டப்பட்டு பிடித்து காவல் நிலையங்களில் கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டு சென்றால் கூட காவலர்கள் அலட்சியத்துடனும், தான்தோன்றித்தனமாகவும் நடந்து கொண்டு அந்த நபர்களை வெளியில் விட்டு விடுகிறார்கள். இதனால் காவல் துறை மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் இருந்து வந்தனர். 

திருச்சியில் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் தாக்கியதில் உஷா என்ற கர்ப்பிணி பெண் இறந்ததை தொடர்ந்து 2 மாதங்கள் வாகன தணிக்கை செய்யாமல் இருந்து வந்தனர். இப்போது மீண்டும் வசூல் வேட்டை என்ற வாகன தணிக்கையை ஆரம்பித்து விட்டனர் காவல் துறையினர். இதில் அக்கரை செலுத்தும் போலீசார் இரவு ரோந்து செல்ல எத்தனை முறை சொன்னாலும் செல்வதில்லை. நிலைமை இப்படி இருக்க ஒருபுறம் வலைதளங்களில் வடநாட்டு இளைஞர்கள் தமிழகத்தில் பல்வேறு குழுக்களாக பிரிந்து குழந்தைகளை கடத்த ஆங்காங்கே சுற்றித்திரிகின்றனர் என்ற ஒரு தகவல் வாட்ஸ் அப் மற்றும் முகநூல் போன்றவற்றில் வலம் வந்தது. இதற்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை. ஆனால் இதை யார் பரப்பி விட்டது என்றும் இதுநாள் வரை தெரியவில்லை. இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. பல கிராமங்களில் பொதுமக்கள் இரவு பகல் பாராமல் தங்களுக்கு தாங்களே காவல் என்ற ரீதியில் கண்விழித்து காவல் காத்து வரத் தொடங்கிவிட்டனர். இப்படி இருக்கும் வேளையில் பல கிராமங்களில் தண்டோரா மூலமும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதில் வடநாட்டு இளைஞர்கள் யாராவது துணி விற்கிறேன் என்றோ, கம்பளி போர்வை விற்பதாகவோ வந்தால் அவர்களை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிப்பு செய்தனர். இதனால் பொதுமக்கள் மேலும் விழிப்படைந்தனர். 

இதனால் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகே ஒரு வடநாட்டு இளைஞரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜம்னாமரத்தூரில் சென்னையைச் சேர்ந்த ருக்மணி என்ற மூதாட்டியும் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டனர். குழந்தை கடத்தல் கும்பல் எது? ஊரைச் சுற்றிப்பார்க்க வந்த கூட்டம் எது என்று கூட கிராம பொதுமக்கள் அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் இதுபோன்ற விபரீதங்கள் நிகழ்ந்துள்ளன. 
இதற்கெல்லாம் அடித்தளமாக விளங்குவது தொலைக்காட்சிகளில் தினமும் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்கு சின்னத்திரையில் வன்முறை, ஆள்கடத்தல், கொலை, கொள்ளை, திருட்டு என்று சமூக விரோத செயல்கள் திட்டம் தீட்டி அரங்கேற்றுவதை காண முடிகிறது. இதைப்பார்க்கும் பல வக்கிரபுத்தியாளர்கள் இதுபோன்ற பாதையை தேர்வு செய்கின்றனர். திரைப்படத்துக்கு சென்சார் போர்டு என்ற தணிக்கை துறை உள்ளது. 

ஆனால் சின்னத்திரையை சென்சார் போர்டு ஏன் கவனிப்பதில்லை. எந்த சேனலை பார்த்தாலும் இதே நிலைதான் போட்டி போட்டுக் கொண்டு நடந்து வருகிறது. நாட்டில் தற்போது நடந்து வரும் இதுபோன்ற சம்பவங்களுக்கு தொலைக்காட்சி சீரியல்கள்தான் காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். யார் குடும்பத்தை கெடுப்பது, ஆளை எப்படி கடத்துவது, எப்படி கொலை செய்வது? கொலை செய்து விட்டு காவல் துறையிடம் இருந்து எப்படி தப்பித்து கொள்வது என்று அ முதல் ஃ வரை விவரமாக சொல்லித் தருகிறது சின்னத்திரை சேனல்கள். சீரியல்களில் வரும் வசனங்கள் கூட பல ஆபாசமானவைகளாக இருக்கின்றன. இப்படி சமுதாயத்தை மெல்ல சீரழிக்கும் பணியில் சின்னத்திரை ஈடுபட்டு வருகிறது. இதை சமூக ஆர்வலர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
மக்களுக்கு தேவையில்லாத, அவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் வக்கிர காட்சிகள் வசனங்களை சீரியல்களில் இருந்து அறவே நீக்க அவர்கள் முன்வர வேண்டும். காவல் துறையும் செயல்பட முடியாமல் முடங்கிவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டில் நடந்து வரும் குழந்தை கடத்தல் தொடர்பான பீதியில் கொலைகள் அரங்கேறி வருவதற்கும் இதுபோன்ற சீரியல்கள்தான் அடிப்படை காரணமாகும். ஆதலால் தாங்கள் ஒளிபரப்பும் சீரியல்களில் தேவையில்லாமல் வக்கிரமங்களை திணிக்க வேண்டாமே என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சின்னத்திரையினர் இனியாவது சமூகத்தின் மீது அக்கரை கொண்டு யாருக்காக நாம் சீரியல்கள் ஒளிபரப்புகிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூகத்தின் மீது அக்கரை கொண்டவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. 

Label