OUR CLIENTS
காவிரி விவகாரம்: திருத்தங்களுடன் வரைவு செயல்திட்ட அறிக்கை தாக்கல்
காவிரி விவகாரம்: திருத்தங்களுடன் வரைவு செயல்திட்ட அறிக்கை தாக்கல் Posted on 17-May-2018 காவிரி விவகாரம்: திருத்தங்களுடன் வரைவு செயல்திட்ட அறிக்கை தாக்கல்

புதுடெல்லி, மே 17-

காவிரி நதிநீர் பங்கீட்டை மேற்கொள்ளும் அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயர் வைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதையடுத்து, 3 திருத்தங்களுடன் செயல் திட்டத்தை இன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்ற உத்தரவை செயல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கட்கிழமை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.  அப்போது, கர்நாடகத்தில் புதிய அரசு அமைய உள்ளதால், விசாரணையை ஜூலை முதல் வாரம் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று கர்நாடக அரசு வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்தார். இதனை நீதிபதிகள் நிராகரித்தனர். தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வாரியத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயர் வைக்க மத்திய அரசும், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களும் ஒப்புக் கொண்டன. வாரியத்தின் தலைமையகத்தை டெல்லியில் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். ஆனால், தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தனர்.  நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, நதிநீர் பங்கீட்டில் அனுபவம் பெற்ற மூத்த அதிகாரியையே தலைவராக நியமிக்க முடியும் என்று அவர்கள் விளக்கம் அளித்தனர். அதேநேரம், வாரியத்துக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், மத்திய அரசின் முடிவே இறுதியானது என்ற பிரிவை நீக்கிவிட்டு, வாரியத்தின் முடிவே இறுதியானது என்று மாற்றியமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதையடுத்து, செயல் திட்டத்தில் மூன்று திருத்தங்களை செய்து இன்று மதியம் மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். திருத்தப்பட்ட செயல் திட்டத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுவிட்டால், பின்னர் அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்பின்னர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Label