OUR CLIENTS
கமலின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்குமா தி.மு.க?
கமலின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்குமா தி.மு.க? Posted on 17-May-2018 கமலின் அனைத்து கட்சி கூட்டத்தை  புறக்கணிக்குமா தி.மு.க?

சென்னை, மே 17-

காவிரி விவகாரம் தொடர்பாக கமல் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து, இன்று நடக்க இருந்த திமுக மற்றும் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இதனால், கமல் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் தங்களது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் கமல்ஹாசனும் காவிரி விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளார். மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் சார்பாக காவிரி விவகாரம் குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தை நடத்த கமல் முடிவு செய்தார். இந்த கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் நடைபெறும் என்றும் அறிவித்தார். அதனை தொடர்ந்து திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்த கமல் தனது கட்சியின் சார்பாக நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். இது குறித்து கருத்து தெரிவித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தனது தோழமை கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடக்க இருந்த கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில், காவிரி விவகாரம் குறித்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால் இந்த கூட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது.

முன்னதாகவே கமல்ஹாசன் 19-ம் தேதி நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நல்லகண்ணு பங்கேற்கமாட்டார் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்திருந்த நிலையில், இன்று திமுகவும் ஆலோசனை கூட்டத்தை ஒத்திவைத்துள்ளது. இதனால், கமல் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Label