OUR CLIENTS
கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு
கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு Posted on 18-May-2018 கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு

பெங்களூரு, மே 18-

ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வராக எடியூரப்பா நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதேசமயம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்தால் மெஜாரிட்டி இருப்பதால், கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. அதன்படி முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட குமாரசாமி ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம்  எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி எடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கிடையில், திடீர் திருப்பமாக எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா நேற்று இரவு அழைப்பு விடுத்தார். மேலும் பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க  ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை உடனடியாக விசாரித்த உச்ச நீதிமன்றம், பதவியேற்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் ஆளுநரின் அழைப்பையடுத்து ராஜ்பவனில் நேற்று காலை பதவியேற்பு விழா நடைபெற்றது. கர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் எடியூரப்பாவுக்கு மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.  இந்த பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர், அசோக் கெஹ்லாட் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். பதவியேற்பு விழாவையொட்டி ஆளுநர் மாளிகை மற்றும் அதனை அருகிலுள்ள பகுதிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. 
இதனையடுத்து எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவை ஆதரித்தால் மட்டுமே இது சாத்தியம். இதற்கு 15 நாட்கள் அவகாசம் இருப்பதால் குதிரைபேரம் நடைபெற வாய்ப்பு அதிகமாக உள்ளன. எனவே, காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தங்கள் எம்எல்ஏக்களை பாஜகவினர் நெருங்க விடாமல் பாதுகாத்து வருகின்றனர்.இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எடியூரப்பா பதவியேற்பை கண்டித்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் தலைமைச் செயலகம் வந்து தனது பணியைத் தொடங்கினார் எடியூரப்பா. முதல் கையெழுத்தாக ரூ.56 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார். இதன்மூலம் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய 5000 ரூபாய் முதல் 1 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.   பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Label